கொரோனா தொற்று அதிகமுள்ள மகராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ குழு அடங்கிய நடமாடும் வாகனங்களின் சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். மேலும் 2,000 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் சார்பில் வழங்கினார்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
நெருக்கடியான காலத்தில் ஆர்வத்துடன் பணிக்கு வந்துள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகள். சென்னையில் சிகிச்சை அளிக்க கூடுதல் சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2,000 செவிலியர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு பணி நியமன ஆணை பெற்ற 2000 செவிலியர்கள் இன்று பணியில் சேருகின்றனர். சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது.
கூடுதல் ஆம்புலன்கள் சென்னையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்களுடன் 254 வாகனங்கள் சென்னை மாநகராட்சியில் பணியில் உள்ளன.
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விடுபடாமல் அடையாளம் காணப்படுகின்றனர். வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்படுகின்றன. தொற்று தெரிய வந்ததும் மருந்து, மாத்திகரைகள் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. தொற்று அதிகமுள்ள மகராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகம் செய்யப்படுகின்றன.
கொரோனா சோதனை அதிகரிப்பதால் அதிக பாதிப்பு கண்டறியப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.