தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமுடியாது என ஈ.பி.ஆர்.எல் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் வந்த சுமந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். அந்தச் சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைக் கட்சியில் இணைத்து கொள்வது தொடர்பாக அழுத்தங்களை தான்கொடுத்தார் எனத் தெரிவித்திருந்தார்.
தான் ஒருவன் தான் முன்னாள் போராளிகளை இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையில் செயலாளராக உள்ள சட்டத்தரணி தவரசா என்பவர் முன்னாள் போராளிகளை இணைப்பதற்கு தான் கோரிக்கை விடுத்தார் எனச் சுமந்திரன் கூறுவது முழுமையான பொய் என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.
முன்னாள் போராளிகளை கட்சியில் இணைப்பது என்பது பொதுவான கருத்தாக இருந்தது. சுமந்திரன், தான் மட்டும் தான் அந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகச் சொல்வது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் தவராசா தனது கருத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார். போராளிகளை இணைப்பது, இணைக்காமல் விடுவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கூட வவுனியாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் பேசியதாகவும், அவர்களை இணைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியிலும், கூட்டமைப்பின் பங்காளிகட்சிகளுடனும் பேசி அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் போராளிகள் தொடர்பாகவும், அவர்களை கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும், கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் பேச்சாளரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறிவருவதை காணக்கூடியதாக உள்ளது. தேர்தலுக்காக நாங்கள் எல்லோரும் போராளிகளுக்காகச் செயற்படுகின்றோம் என்ற தொனியில் கருத்துக்களை வெளியிடுவதையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது. உண்மையாகவும் நேர்மையாகவும் போராளிகளை அரசியலில் இணைத்துக் கொள்ளுகின்றார்களா?
இல்லாவிட்டால் தேர்தலுக்காக போராளிகளில் கரிசனை உள்ளது போன்று காட்ட முயற்சிகிக்கின்றார்களா? என்பது முக்கியமான கேள்வியாக தற்போது எழுந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னவர்கள், ஆயுதம் தூக்கிப் போராடிய போராளிகளை எவ்வாறு கட்சியில் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒரு முரண்பாடானதும், எள்ளிநகையாடக்கூடிய கருத்துக்களாக உள்ளது.