சிறிலங்காவில் குத்தகை வழங்கல் கம்பனிகள் குறித்த நாடாளுமன்றச் சட்டம் திருத்தப்பட வேண்டும்- ஜே.வி.பி.

264 0

சிறிலங்காவில் குத்தகை வழங்கல் கம்பனிகள் தொடர்பான நாடாளுமன்றச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கம்பனிகளுக்கு அதிகூடிய அதிகாரங்களை தற்போதுள்ள சட்டம் வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன குத்தகை வழங்கல் மாபியா தொடர்பாக வெளிப்படுத்திய தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கடந்த செவ்வாய்க்கிழமை வாகனங்களைக் குத்தகைக்கு வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றின் முன்னால் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்திற்குக் கண்டனம் வெளியிட்டு தனது டுவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “குத்தகை வழங்கல் கம்பனிகளின் இரக்கமற்ற மிகமோசமான நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவாகக் குரலெழுப்பிய தொழிற்சங்கத் தலைவரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அத்தோடு, குத்தகை வழங்கல் கம்பனிகள் தொடர்பான நாடாளுமன்றச் சட்டம், அக்கம்பனிகளுக்கு அதிகூடிய அதிகாரங்களை வழங்கியிருக்கின்றன. அவற்றுள் குத்தகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதும் உள்ளடங்குகின்றது.

எனவே, இந்தச் சட்டம் மீளவும் திருத்தப்பட வேண்டியது அவசியமாகும். அதேபோன்று இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் உரியவாறு தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் பதிவில் குறிப்பிடுள்ளார்.