நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தலைமைத்துவக் காலத்தின் போது தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எழவேண்டும் என்றால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் செயலாளர் நாயகம் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கைச்சாத்திட்டு இந்த கடிதத்தை அனுப்பு வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதானது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைத்திருக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமான மேன்முறையீடு
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற ஒரு குடையின் கீழ் அண்மையில் கூட்டுச் சேர்ந்திருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் 10 – 15 வருடத்திற்கும் மேற்பட்ட காலம் சிறையகப்படுத்தப்பட்டிருக்கும் 91 தமிழ் அரசியல் கைதிகளுக்காக நீதி வேண்டி இந்த மேன்முறையீட்டை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.
எமக்குக் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மேன்முறையீடு செய்து அம் மேன்முறையீடுகளும் முடிவுற்ற தண்டனையை அனுபவிப்போர் – 29 பேர், குற்றவாளிகளாகக் காணப்பட்டு தற்போது மேன்முறையீட்டின் முடிவை எதிர் பார்த்திருப்போர் – 17பேர், குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்கெதிரான விளக்கம் நடைபெற்றுக் கொண்டிருப்போர் – 38பேர், குற்றத்தை ஏற்று தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையில் இருப்போர் தொகை 7 பேர் என ;மொத்தமாக ; 91 அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களுள் மிகப் பெருவாரியானவர்கள் 12 வருடங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
அதுமட்டுமல்ல கைதுசெய்யப்பட்ட போது இவர்களில் பலர் 20 அல்லது 30 வயதிற்கு உற்பட்டவர்களாக இருந்தனர். அவர்களின் தொடர் சிறைப்படுத்தலானது அவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது என்பது மட்டுமன்றி அவர்களின் குடும்பங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல் இவ்வாறு சிறையில் இருந்த இரு கைதிகள் சில காலத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளனர். ஏனையவர்களுக்கிடையில் மேல் மட்ட இயக்கத் தலைவர்கள் கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் கே.பத்மநாதன் போன்றௌர் விடுவிக்கப்பட்டமையால் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாமும் விரைவில் விடுவிக்கப்படுவோம் என்ற ஒரு நியாயமான எதிர்பார்ப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு அப்போது இருந்தது.
10 – 15 வருடங்கள் தொடர் சிறையில் இவர்கள் இருந்து வந்துள்ளதன் காரணமாக அவர்களின் நிலைமை கருணையுள்ளத்துடனும் இரக்க சிந்தனையுடனும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். தமது இளமையின் பெரும்பாகத்தை தொடர்ந்து சிறைகளில் கழித்துள்ள இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்ப்பது என்பது இந் நாட்டின் மக்கட் பிரதிநிதிகள் இடையில் உரையாடல், கருத்துப்பரிமாற்றம், கலந்தாலோசித்தல் மூலம் ஏற்படக் கூடிய ஒரு அரசியல் செயற்பாட்டிற்கான பொறுப்பு மிக்க முன்னோடியாக அமையும் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதை தங்களுக்கு அறியத்தருகின்ரோம்.
பொதுத் தேர்தலின் பின்னரும் உங்கள் தலைமைத்துவக் காலத்தின் போதும் எமது தேசிய பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அமைதித் தீர்ப்பைப் பெற குறித்த நாதியற்ற கைதிகளின் பிரச்சனைகளைத் தீர்பதானது எமது தமிழ் மக்களிடையே நம்பிக்கையையும் நம்பத்தகுந்த ஒரு சூழலையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எனவே இது சம்பந்தமாக உறுதியான தீர்மானம் எடுத்து குறித்த நல் வாய்ப்புப் பெற எமது நாட்டின் குடிமக்களை உடனே விடுவித்து அவர்கள் தமது குடும்பங்களுடன் சேர்ந்து மீண்டும் சமூக வாழ்க்கையைத் தொடர உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் மாண்புமிக்க உங்களிடம் கேட்டுக்கொள்கின்ரோம். குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களை விடுவிக்க விசேட பொது மன்னிப்பு அவசியம் என்பதையும் மற்றவர்களை தங்களுக்கிருக்கும் அதிகாரம் மூலம் விடுதலை செய்யலாம் என்பதையும் வேண்டுமெனில் அது நீதிமன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் நாம் அறிந்துள்ளோம் என அவர்கள் இந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.