இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளன என 2019 ஏப்பிரல் ஒன்பதாம் திகதி தகவல் கிடைத்தது எனினும் நான் அதனை நம்பவில்லை எனஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக பணியாற்றிய நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் 9 ம் திகதி கிடைத்தது மிகவும் இரகசியமான கடிதம் எனினும் அதற்கு முன்னர் பொலிஸாருக்கு இவ்வாறான எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படாததால் நான் அதனை நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு துறை அதிகாரியான சிசிர மென்டிஸ் இந்த கடிதத்தினை அவ்வேளை பிரதிபொலிஸ்மா அதிபராகயிருந்தவருக்கு அனுப்பியிருந்தார் அவர் அந்த கடிதத்தினை எனக்னு அனுப்பியிருந்தார் பல முக்கிய பொலிஸ் அதிகாரிகளிற்கு அனுப்பியிருந்தார் என நந்தன முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதம் எனக்கு கிடைக்கும் வரையில் நான் இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அறிந்திருக்கவில்லை என ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ள அந்த அதிகாரி இந்த சந்தேகத்தினால் நான் பிரதிபொலிஸ்மா அதிபரை தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்
ஆறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் எனவும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே நான் பொலிஸ்மா அதிபரை தொடர்புகொள்ளவில்லை, புலனாய்வு பிரிவினரும் குறித்த தகவல்குறித்து விசாரணைகளை மேற்கொள்கின்றனர் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளிற்கு திறமைவாய்ந்த தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்குவதற்கு பல தசாப்தங்கள் எடுத்தன- நான் அவ்வாறு வலுவான இஸ்லாமிய அமைப்பு இலங்கையில் இருக்கும் என கருதவில்லை அவ்வாறான தகவல்கள் முன்னர் கிடைத்ததும் இல்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.