ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தது.
இக்கம்பனி ஆரம்பம் முதலே முறையாக செயற்படவில்லை என குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். கம்பனியின் சொத்துக்கள் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அவை மத்திய வங்கியின் உரிய கண்காணிப்புக்கு உட்படவில்லை என்றும் இக்குழு தெரிவித்துள்ளது.
முறைகேடுகள் பற்றி மேலும் கண்டறியுமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், மக்களின் வைப்புப் பணத்தை உடனடியாக மீளச் செலுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் குறிப்பிட்டார். இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்த பொறுப்பிலிருந்து மத்திய வங்கியினால் விலகிக்கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நிதி நிறுவனமொன்றில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெறுமானால் வைப்பாளர்களை பாதுகாப்பதற்கான கடப்பாட்டினை மத்திய வங்கி கொண்டுள்ளது. அப்பொறுப்பை மத்திய வங்கி நிறைவேற்றவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்ரசிறி அவர்கள் மூன்று அங்கத்தவர்களை கொண்ட இக்குழுவுக்கு தலைமைதாங்குகின்றார். ஓய்வுபெற்ற அரச தலைமை வழக்குரைஞர் சுகத கம்லத் மற்றும் சிரேஷ்ட வங்கியியலாளர் டீ.எம். குணசேக்கர ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினார்.