கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதன் புனரமைப்புப் பணிகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் முழுமூச்சுடன் நடைபெற்று வருகின்றது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலகுகடன் திட்டத்தின் கீழ் குளக்கட்டு 2 அடியால் உயர்த்தி நீர் கொள்ளளவை கூட்டுவதற்கான திட்ட வரைபும் அதனுடன் இணைந்த ஏனைய கட்டுமானங்களும் சுமார் 2000 மில்லியன் பெறுமதியில் நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்காரரிடம் வழங்கப்பட்டு துரித கதியில் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.குளக்கட்டு நிர்மாணத்திற்கு சமாந்தரமாக குளத்தின் கீழ் அமைந்திருக்கும் 21,ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கின்ற பிரதான வாய்க்கால், வயல் வாய்க்கால், கழிவு வாய்க்கால் மற்றும் விவசாய வீதிகள் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஐ.எவ்.ஏ.டி நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 2ஆயிரத்து 890 மில்லியன் இலகு கடனிலும், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 310 மில்லியன் நிதி உதவியுடனும் புனரமைப்புப் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் இதன் புனரமைப்பு பணிகள் தொடர்பாக இன்றையதினம் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் நீர்ப்பாசனப் பொறியிலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.இக்கலந்துரையாடலின்போது மாகாண பணிப்பாளர், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் மாகாண நீரப்பாசனப் பொறியியலாளர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன் மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.