யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வலிகாமம் வடக்கு பகுதியில் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனை காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர் சங்கத்தினர் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது ஊழியர்களுக்கான வீடமைத்துக் கொடுப்பதற்குரிய கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இன்றைய சந்திப்பின் போது சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்க வேண்டும், இளம் வயதில் சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்து கடந்த கால யுத்தம் காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டதனால் வேலை இழந்தவர்களுக்கு உரிய நஸ்ட ஈட்டைப் பெற்றுத்தரவேண்டும்மற்றும் சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்கும் போது தமது பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
சீமெந்துத் தொழிற்சாலையில் கடமையாற்றிய காணி உள்ள 154 முன்னாள் ஊழியர்களுக்கு வீடுகள் அமைத்துத் தருவதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் சம்மதம் தெரிவித்ததுடன் சீமெந்துத் தொழிற்சாலை தொடர்பான விடயங்களுக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீனுடன் கலந்துரையாடிய பின் முடிவு தருவதாக அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.