செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

538 0

11.06.2020

செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு
‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

தாயகவிடுதலைப் பயணத்தில் தொடக்ககாலப் போராளியாகவும் பின்னர் டென்மார்க் கிளையின் வீபோ நகர செயற்பாட்டாளருமான செல்வராசா பொன்னுத்துரை அவர்கள் 08.06.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அக்காச்சியண்ணை என அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்ட இவர், 1992 முதல் வீபோ நகரின் மாலதி தமிழ்க்கலைக்கூடத் தொடக்கநிலை நிர்வாக உறுப்பினராக இருந்து, மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் வழங்கிப் பணியாற்றியவர்.

தமிழீழத்தேசத்தின் விடுதலையை விரைவுபடுத்தவேண்டும் என்கின்ற தீராத தாகத்தோடு, இரவுபகல் பாராது தேசப்பணிபுரிந்த செயற்பாட்டாளர். எல்லோரையும் கவரும் எளிமையான வாழ்வும் தேசவிடுதலைப்பணிகளில் ஏனையவர்க்கு எடுத்துக்காட்டாகத் திகழும் பண்பும் கொண்டிருந்த இவர், நெருக்கடிகள் மிகுந்த தன் குடும்பச் சூழ்நிலைகளுக்கு நடுவேயும் சளைக்காது பணியாற்றிய பெருமைக்குரியவர்.

2009 இற்குப் பின்னரான காலத்திலும் மனந்தளராது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களது சிந்தனைக்கமைவாக, மாவீரர்களது கனவுகளை நனவாக்கும் உறுதியோடு செயலாற்றியவர். தனது அன்பாலும் பொறுமையாலும் மக்களது மனங்களில் நிறைந்தவர்.

இத்தகைய விடுதலைப் பற்றுக்கொண்டு இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளனைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் செல்வராசா பொன்னுத்துரை அவர்களின் தேசப்பற்றுமிக்க செயற்பாட்டிற்காக நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.