சிறிலங்காவில் தேர்தல் ஆணைக்குழுவின் கடந்தகால செயற்பாடுகள் புதிய நாடாளுமன்றத்தில் கவனிக்கப்படும்- அனுராத ஜயரத்ன

376 0

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடந்த காலத்தில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், பக்கச் சார்பாகவும் அமைந்ததாக சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “பொதுத் தேர்தலை நடத்தும் திகதி தேர்தல் ஆணைக் குழுவினால் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட ஆளும் தரப்பினர் தயாராகவே உள்ளோம்.

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடந்த காலத்தில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், பக்கச்சார்பாகவும் அமைந்தது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதால் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், அதிகாரங்கள் குறித்து பரிசீலனை செய்யப்படும்.

இதேவேளை, பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தவறானதாகும்.

ஜனாதிபதி தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது.

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆதரவைப் பெற்று பலமாக தனித்து அரசாங்கத்தை அமைக்கும்” என்று குறிப்பிட்டார்.