கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணையை சீனா ஆதரிக்கிறது என தெரிய வந்துள்ளது.
உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில்தான் முதன்முதலாக தோன்றி தென்பட்டது என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது.
இந்த தொற்று காட்டுத்தீ போல பரவத்தொடங்கியபோது அமெரிக்கா அதிர்ந்து போனது.
இந்த வைரஸ் தொற்று பற்றிய தகவல்களை பரவ விடாமல் சீனா ஆரம்பத்தில் தடுத்து விட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. சீனா நினைத்திருந்தால், இந்த வைரஸ் தொற்றை தனது நாட்டுக்குள் கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்றும் அமெரிக்கா சொல்கிறது.
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுக்கிறது. சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூட கொரோனா வைரஸ் தொற்று பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனத்துக்கும், அமெரிக்காவுக்கும் சரியான நேரத்தில் தெரிவித்து வந்துள்ளதாக சீனா கூறியது.
இந்த விவகாரம் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தீர்மானிக்கும் அமைப்பான உலக சுகாதார சபை கூட்டத்தில் எதிரொலித்தது.
அதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றி உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்துவதற்கு தங்களது ஆதரவை தெரிவித்தன.
இந்த நிலையில் ரஷியாவுக்கான சீன தூதர் ஜாங் ஹன்குய், மாஸ்கோவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இது தொடர்பாக சில கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஆனால், முன்கூட்டியே குற்றம் சுமத்தும் மன நிலையில் இந்த விசாரணையை நடத்துவதற்கு நாங்கள் எதிரானவர்கள்.
இந்த விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடனும் சரி, உலக நாடுகளுடனும் சரி, சீனா ஒத்துழைக்க தயாராக இருக்கிறது. அது எங்கள் கடமை.
ஆனால், கொரோனா வைரசின் தோற்றத்தை தீர்மானிப்பது ஒரு அறிவியல் பிரச்சனை. அது அரசியல் பிரச்சனை அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.