ராயபுரம் காப்பக சிறுவர்களுக்கு கொரோனா- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

250 0

சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. காப்பாளருக்கு முதலில் கொரோனா தொற்று இருந்ததாகவும், அலட்சியமாக இருந்ததால் மற்ற சிறுவர்களுக்கும் தொற்று பரவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. அப்போது, காப்பகங்களில் கொரோனா தொற்று பரவியது எப்படி? அங்கு குழந்தைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், குழந்தைகள் காப்பகத்தின் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கின் விசாரணை ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.