’சுகாதார வழிகாட்டலில் தேர்தல் நடத்த முடியாது’

261 0

சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் பிரகாரம், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியுமென யாராவது நினைப்பார்களாயின், அவ்வானவர்களுக்குத் தேர்தல் தொடர்பில் துளியளவேனும் புரிதல் இல்லையென, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும் ஊவா மாகாண முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதனைவிடவும், வாக்குப் பெட்டிகளைக் கட்சிக் காரியாலயங்களுக்கு அனுப்பிவைத்து நிரப்பியனுப்புமாறு கூறுவது உசித்தமானதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பின்னால் இருந்துகொண்டு ஆதரவு நல்கும் குழுக்களுக்கு, சுகாதாரப் பிரிவினரின் அளவுகோல்கள்/ பரிந்துரைகள்/ வழிகாட்டுதல்கள், அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள அவர், எட்டு காரணங்களை குறிப்பிட்டு, அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.

1. அரச தொழில்வாய்ப்பை எதிர்ப்பார்த்திருப்போரே, ஆளும் கட்சியின் உள்ளகக் கூட்டத்துக்கு வருகை தருவதற்கான பெயர் விவரங்களைக் கொடுப்பர்.

2. எதிர்ப்பு அரசியலைச் செய்கின்றவர்களின் உள்ளகக் கூட்டங்களுக்குச் செல்வோர், தங்களுடைய பெயர் விவரங்களைக் கொடுப்பதற்கு முன்வருவார்களா?

3. உள்ளகக் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் குழுவினர், அந்தப் பட்டியலில் இருப்பதைச் செய்துவிட்டு, தேர்தலுக்கு முன்னரான வன்முறைகளுக்கு உள்ளாவதற்கு விரும்புவார்களா?

4. சந்தியொன்றில் நடத்தப்படும் சிறிய கூட்டத்துக்கு மேடையமைக்க, ஒலிபெருக்கிகளை இயக்குவோர், கதிரைகளை வழங்குவோர், மின்விளக்குகளை வழங்குவோர், ஊடகவியலாளர்களென ஆகக் குறைந்த எண்ணிக்கையான 40 பேர் பங்கேற்றால், ஆகக் குறைந்த வேட்பாளர்கள் நால்வர் பங்கேற்றால், அதற்கு மேலதிகமாக பொலிஸார், புலனாய்வுத் துறையினர் என எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும். இதேவேளை, 10 பேர் பங்கேற்கும் கூட்டமொன்றுக்கு ரூ. 2 இலட்சத்தைச் செலவிடுவதற்கு, யாருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை.

5. 500 பேர் பங்கேற்கும் கூட்டத்தை ஏற்பாடு செய்யவேண்டுமெனப் பரிந்துரைத்தவருக்கு, இவ்வாண்டுக்கான “நல்ல புனைக்கதை” க்கான விருதை வழங்கவேண்டும். ஏனெனில், ஜனாதிபதி, பிரதமர், சஜித், ரணில், சம்பந்தன், அநுரகுமார திஸாநாயக்க, ஹக்கீம், ரிஷாட் உட்பட, தேசிய கட்சிகளின் தலைவர்கள் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் பாதுகாப்புக்கென நிறுத்தப்படும் எண்ணிக்கையை தொடர்பிலும் வழிகாட்டுதல்களை தயாரித்தோருக்கு அனுபவமில்லை.

6.துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், கூட்டங்களை நடத்துதல் என்பன, நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில், பிரசாரத்துக்காகச் சட்டரீதியில் வழங்கப்பட்டிருக்கும் அங்கிகாரமாகும். தேர்தல் சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தப்படவில்லையெனில், பாதுகாப்பான பணிகள் நிறையவே உள்ளன.

7. தேர்தல்கள் ஆணைக்குழு விரும்பும் கட்சிக் காரியாலயங்களுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பி, விருப்பத்துக்கேற்ப அவற்றை நிரப்பியனுப்புவதற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அது எவ்வளவு “சுதந்திரமானது” “எவ்வளவு அமைதியானது”
8. அரசியல் கட்சிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தச் சுகாதார வழிகாட்டல்களையும் பரிந்துரைகளையும் வாசித்திருக்க மாட்டார்கள். அளவுகோல்கள்/ பரிந்துரைகள்/ வழிகாட்டுதல்களை வாசிக்காமல், தேர்தலை நடத்தியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று, தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.