சிறிலங்காவில் கொட்டகலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

284 0

சிறிலங்கா  திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு நேற்று (புதன்கிழமை) மாலை ஹட்டன் நோக்கி பயணிக்கையிலேயே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கொட்டகலை நகரிலிருந்து பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து இளைஞர் தூக்கி வீசப்பட்டதையடுத்து, வீதிக்கு அருகாமையில் இருந்த எல்லை நிர்ணய கல்லில் தலை அடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, படுகாயமடைந்த அவரை கொட்டகலை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோகரன் கணேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.