சிறிலங்காவில் வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை இன்று (புதன்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அவருக்கு, நீதவான் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் வழங்கப்பட்ட பிணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்துச் செய்தது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் பின்னர் ராஜித சேனாரட்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.