உரம் வழங்கல், விநியோகம், பயன்பாடு என்பன தொடர்பில் விவசாய சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உரம் வழங்கல், விநியோகம் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை கண்டறிவதற்காக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில்; இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மாகாண ஆளுநர்கள், உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
நீண்ட காலமாக பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பமாகியுள்ளதையடுத்து பல மாகாணங்களில் உரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, சிறிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் அதற்கு தீர்வு கண்டறியப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நெல்லுக்கு அதிக விலை கிடைப்பதன் காரணமாக விவசாயிகள் பெருமளவில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர். விவசாய இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள், தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறி, பழங்கள் மற்றும் தானிய பயிர்ச்செய்கை காணிகளின் அளவு அதிகரித்துள்ளமையும் உரப் பிரச்சினைக்கு காரணமாகும் என்று அதிகாரிகளும், ஆளுநர்களும் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கில் விவசாயிகள் சேதன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் அறுவடைகள் தரத்திலும் அளவிலும் அதிகம் என வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சாள்ஸ் இதன்போது, குறிப்பிட்டார்.
கடந்த காலத்தைப் போன்று நாட்டின் ஏனைய மாவட்டங்களின் விவசாயிகளையும் சேதன உரத்தினை பயன்படுத்தச் செய்வதன் மூலம் சில சுகாதார பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
சேதன உரத்தினை உரிய நியமங்களுடன் உற்பத்தி செய்வது குறித்து விசேட கவனம் செலுத்துமாறும், சேதன உரத்தினை விரைவாக பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கை என்னவென்று கண்டறியுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
சேதன உரத்தை பயன்படுத்தி பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி கண்டறிய வேண்டியதன் தேவையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சேதன உரப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அறுவடைகளை கொள்வனவு செய்யும் போது அதிக விலையை நிர்ணயிப்பதற்கும் அதற்காக நிவாரணம் வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சேதன உர உற்பத்தியை பாரியளவிலான வியாபாரமாக முன்னேற்றுவதன் மூலம், இரசாயன உரத்திற்கான கேள்வியை குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.