கொரோனா தொற்று கண்டறியும் நடவடிக்கையில் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே தேனி மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது.
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஒருங்கிணைந்த பல்துறை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் இன்று வரை மொத்தம் 16,954 மாதிரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிக அளவில் மாதிரிகள் சேகரித்து பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 12,060 மாதிரிகள் என்ற விகிதம் அடிப்படையில் கொரோனா தொற்று கண்டறியும் நடவடிக்கையில் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே தேனி மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது.
கடந்த 2 வாரங்களாக தேனி மாவட்டத்திற்குள் புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என பரிசோதனைகள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் கடந்த 2 வாரங்களிலும் தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள் ஆவார்கள்.
தேனி மாவட்டத்திற்குள் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கவனக்குறைவாக இல்லாமல் பொதுமக்கள் விழிப்புடன் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்கள் சென்று வந்தவர்கள் அவர்களது வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.பொது ஊரடங்கு வருகின்ற 30.6.2020 வரை நடைமுறையில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் வீடுகளை விட்டு வெளியே வரும் போது முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா தொற்று தடுப்பு முறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் நேற்று சோதனைச்சாவடிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 168 நபர்கள் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 156 நபர்கள் மொத்தம் 324 பேர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.