கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்- திருநாவுக்கரசர்

338 0

கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி., கூறியுள்ளார்.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் 35 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி., கலந்து கொண்டு பயனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், துணை தலைவர் கோபால், முன்னாள் மேயர் சுஜாதா, அரவானூர் விச்சு, மன்சூர் அலி, பெஞ்சமின் இளங்கோ, ஜெயப்பிரியா, ஜெகதீஸ்வரி,

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கலை, மாவட்ட கவுன்சிலர் மண்ணச்சநல்லூர் மேற்கு கிருஷ்ணகுமாரி, திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறியாளர் பிரிவு தலைவர் கணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது திருநாவுக்கரசர் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு 2019-20 க்கான பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.2.50 கோடி மட்டும் ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள ரூ.2.50 கோடி மற்றும் அடுத்தாண்டுக்கான ரூ.5 கோடியும் ஒதுக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா அடுத்த ஆண்டு வரை இருக்குமோ? என்ற சந்தேகம் வருகிறது.

ரூ.20 லட்சம் கோடிக்கு திட்டம் அறிவித்துள்ள மோடி மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்.பி.க்களுக்கு மொத்தமாக ஒதுக்க வேண்டிய நிதி ரூ.7ஆயிரம் கோடி தான் வரும். இதை மறுப்பது அநியாயம். கண்டனத்துக் குரியது.

அதே மாதிரி தமிழக அரசு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 மாதத்தை கணக்கிட்டு ரூ.1000 மட் டுமே வழங்கப்பட்டது. இப்போது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7500 வழங்க வேண்டும். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம். இதைவிட2, 3 மடங்கு பாதிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே பாதிக்கப்படுபவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லாததால் தனியார் ஆஸ்பத்திரிகளில் 25 சதவீத படுக்கையை கொரோனா நோயாளிக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. இதை மேலும் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். முதல்வர் காப்பீடு அனைவருக்கும் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.

நரேந்திர மோடிஅரசும் மக்களின் நிலையை உணர்ந்து ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனா நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, செயல்பாடு திருப்தி அளிப்பதாக இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது.

கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக பா.ஜ.க.வினர் பெருமைப்பட்டு கொள்கின்றனர். உயிர் விலை மதிப்பற்றது. ஒருவர் இறந்தாலும் பேரிடராக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.