ராஜபக்ஷக்களின் அரசியல் வெற்றிக்கான தாரக மந்திரங்கள் எவை?

467 0

எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம் என்ற அரசியல் போக்கை ராஜபக்ஷக்கள் ஆழமாகவம் அகலமாகவும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியபோது, இந்த அரசியல் உத்தி அவர்களுக்குப் பெரிய அளவில் கைகொடுத்திருந்தது. யுத்தத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அதனை அவர்கள் படிப்படியாகக் கடைப்பிடித்து வருவது குறித்து, இந்தப் பத்தியாளரின் எழுத்துக்கள் ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்தன. இப்போது அது நிதர்சனமாகி இருக்கின்றது. வெளிப்படையாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்த ராஜபக்ஷக்கள் இந்த நாட்டின் அரசியல் கதாநாயகர்களாக உருவாகி இருந்தார்கள். யுத்த வெற்றி என்பது வெறுமனே அவர்களுக்குப் பேரையும் புகழையும் மட்டும் ஈட்டித்தரவில்லை. நாட்டின் அரசியலில் வெற்றிவாத அரசியல் என்ற புதிய பாதையில் பயணத்தைத் தொடங்குவதற்கு அது அகலமான வழி வகுத்திருந்தது.

கோடு போட்டால் ரோடு போட்டுவிடுவார்கள் என்று கூறுவார்கள். அந்த வகையில்தான் இராணுவ வெற்றி மூலமாக சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் கிடைத்த அரசியல் செல்வாக்கை அவர்கள் தமது குடும்ப அரசியலை வளப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆனாலும் யுத்தத்தில் வெற்றியடைந்த ஆறு வருடங்களின் பின்னர் 2015 ஆம் ஆண்டு 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இராணுவ மயமான ஒரு குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

தென்னிலங்கையைச் சேர்ந்த ஜனநயாகவாதிகளும் செயற்பாட்டாளர்களும், பொது அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும், இராணுவமயம் சார்ந்த ராஜபக்ஷக்களின் அரசியல் போக்குக்கு எதிராகப் போர்க்கொடி ஏந்தினார்கள். போராடினார்கள். மக்கள் மத்தியில் அவர்களுடைய ஆட்சிக்கு எதிரான ஓர் உணர்வலையை ஏற்படுத்துவதில் இந்தப் போராட்டம் வெற்றி அளித்திருந்தது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகிய இருவரும் மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்சவிடமிருந்து பிரித்தெடுத்து, அவரையே அரசியல் துரும்பாகப் பயன்படுத்தி 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார்கள். ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்கள். அழிந்து போகவிருந்த ஜனநாயகத்தைக் காப்பாற்றியதாக அவர்கள் பாராட்டப்பட்டார்கள்.

இதனால் தங்களுடைய வெற்றிவாத அரசியல் கனவு கலைந்து போனதையடுத்து, ராஜபக்ஷக்கள் முதலில் மனம் தளர்ந்திருந்தார்கள் என்றே கூற வேண்டும். ஆனாலும், அவர்கள் அந்த மனத்தளர்வில் இருந்து விரைவாகவே சுதாகரித்துக் கொண்டார்கள். இனவாதத்தையும் பௌத்த மதவாதத்தையும் அரசியலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் சரிந்து போன தமது செல்வாக்கை நிமிரச் செய்தார்கள்

அரசியல் தாரக மந்திரம்

ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலைமையையும். அவர்களுக்கிடையில் முகிழ்த்திருந்த அதிகாரப் போட்டியையும் பயன்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் தங்களுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்தெடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து தாங்கள் உருவாக்கிய புதிய அரசியல் கட்சியாகிய பொதுஜன பெரமுனவை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தி உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

இந்த உள்ளுராட்சித் தேர்தலே அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தையும் உருவாக்கி இருந்தது. அந்த அரசியல் தளத்தை மிகவும் சாமர்த்தியமாகவும் சமயோசிதமாகவும் பயன்படுத்தி கிராம மட்டத்தில் இருந்து நாடாளுமன்றத் தொகுதி வரையிலான அரசியல் வழித்தடத்தில் அவர்கள் தமது செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாகத்தான் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் 69 லட்சம் வாக்குகளை அறுவடை செய்திருந்தார்கள்.

பௌத்தத்திற்கு முதலிடம். இராணுவத்திற்கு முழுமையான அங்கீகாரம் – இந்த இரண்டுமே ராஜபக்ஷக்களின் அரசியல் வெற்றிக்கான தாரக மந்திரம். மந்திரத்தில் மாங்காயை வீழ்த்த முடியாது என்று கூறுவார்கள். ஆனால் ராஜபக்ஷக்கள் இந்த அரசியல் தாரக மந்திரத்தின் மூலம்தான் மேலாதிக்கமுள்ள நிறைவேற்றதிகார ஆட்சியை நிலைநாட்டி இருக்கின்றார்கள்.

பௌத்தத்திற்கு முதலிடம் என்பது அரசியல் ரீதியானது மட்டுமல்ல. அனைத்துச் செயற்பாடுகளிலும் பௌத்த பீடங்களை முதன்மைப்படுத்துவதும், அவர்களை முன்னிலைப்படுத்திய வழிமுறையில் ஆட்சியைக் கொண்டு செலுத்துவதும் என்ற புதிய நிலைப்பாட்டை ஓர் அரசியல் அட்டவணையாக அவர்கள் வகுத்துக் கொண்டுள்ளார்கள்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியும்சரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்சரி பௌத்த மத பீடங்களுக்கு உயர்ந்த கௌரவத்தையும் மரியாதையையும் அளிக்கப் பின்வாங்கியதில்லை. அவர்களுடைய ஆதரவில்லாவிட்டால் நாட்டில் ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்

ஏனெனில் இலங்கை அரசியலில் பிரித்து ஒதுக்க முடியாத அளவில் பௌத்த மத பீடங்களும் பௌத்தபீடாதிபதிகளும் இறுக்கமாகப் பின்னிப் பிணைந்தள்ளார்கள். அவர்கள் இட்டதே சட்டம். அவர்களின் ஆதரவின்றி அரசியலில் ஓர் அணுவையும்கூட அசைக்க முடியாது என்பதை சிங்கள ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

ஆனாலும், ஐக்கிய தேசிய கட்சியினரிலும் பார்க்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் குறிப்பாக ராஜபக்ஷக்கள் – இப்போது பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் இந்த பேரின அரசியல் சூட்சுமத்தை நன்கு புரிந்து கொண்டு, அதனைத் தங்களுக்கு சாதகமான முறையில் அரசியல் வியூகமாக்கிச் செயற்படுத்தி வருகின்றார்கள்.

ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் பௌத்தமும் இராணுவமும் அரசியலில் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றவையாகும். இந்தத் துப்பாக்கியில் இருந்து தீர்க்கப்படுகின்ற வேட்டுக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியினாலும்சரி, ஏனைய எதிரணி கட்சியினராயினும்சரி ஈடுகொடுக்க முடியாத ஓர் அரசியல் நிலைமையே உருவாகி இருக்கின்றது. உருவாக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு உயர் மட்ட ஜனாதிபதி செயலணிகளே இந்த இரட்டைக்குழல் துப்பாக்கியில் இருந்து ஒரே தடவையில் தீர்க்கப்பட்ட வேட்டுக்களாக வெளிவந்துள்ளன. கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களுக்கான செயலணியாகவும், பாதுகாப்பான நாட்டுக்கும், சட்டத்தை மதிக்கும் ஒழுக்கப் பண்புள்ள சமூகத்துக்குமான அதி உயர் இராணுவ கட்டமைப்பைக் கொண்ட செயலணியாகவும் அவற்றுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன.

வரப்போகின்ற பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு சிங்கள பௌத்த மக்கள் அனைவரையும் சுற்றி வளைத்து திமிர முடியாமலும், நிமிர முடியாமலும் அணைப்பதற்காகவே இந்த இரண்டு செயலணிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

நாட்டின் மத சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள், சிங்கள மக்களை மதமாற்றம் செய்கின்றார்கள் என குற்றச்சாட்டி பௌத்த மதத்திற்கு அவர்கள் பேரிடைஞ்சலாக இருக்கின்றார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்கனவே உருவாக்கி, அவர்களை சிங்கள பௌத்த மக்களின் எதிரிகளாக சித்தரிப்பதில் பௌத்த தீவிரவாதிகள் வெற்றியடைந்திருக்கின்றார்கள்

முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பட்டப்பகலிலும், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த வேளைகளிலும், பௌத்த துறவிகளும், அவர்களோடு இணைந்த பௌத்தமத தீவிரவாதிகளும் பல தடவைகள் தாக்குதல்களை நடத்தி அவர்களுடைய பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் வீடுகளுக்குத் தீவைத்து அடாவடித்தனம் புரிந்திருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மக்கள் மத்தியில்; வெறுப்புணர்வைத் தூண்டி வளர்த்த இந்தச் சம்பவங்கள் அனைத்துமே பௌத்தமத தீவிரவாதிகளின் வெற்றிக்கான அடையாளங்களாகும்.

முஸ்லிம் மக்கள் மீதான மத ரீதியானதும் இன ரீதியானதும் வெறுப்புணர்வைத் தூண்டி வளர்ப்பதற்கு தலைநகர் கொழும்பிலும் பிற இடங்களிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் பேருதவி புரிந்திருக்கின்றன.

அந்தக் குண்டுத்தாக்குதல்களின் மூலம் மைத்திரி ரணில் கூட்டாட்சியில் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட சீரழிவைத் தமது அரசியல் நலன்களுக்கான ஒரு முக்கிய வழிமுறையாக ராஜபக்ஷக்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ஏற்கனவே சிங்கள மக்களின் மதரீதியான வெறுப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களை தேசிய பாதுகாப்புக்குக் குந்தகமான சக்தியாகவும் உணரச் செய்வதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலுக்கும் முஸ்லிம்களே முக்கியமானவர்கள் என்ற தொற்றப்பாட்டை உருவாக்கி சிங்கள மக்கள் அவர்கள் மீது வெறுப்படையச் செய்வதிலும் வெறறி பெற்றிருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.
இதனை கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் குறிப்பாக நோய்;த்தாக்கத்திற்கு உள்ளாகிய முஸ்லிம் ஒருவரின் சடலத்துக்கான இறுதிக்கிரியைகளில் அரசாங்கம் அந்த மக்களின் மத உரிமைகளுக்கு நேர்மாறாகச் செயற்பட்டதன் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது.

என்ன நடக்கும் என்பதைக் கூற வேண்டியதில்லை

அது மட்டுமல்லாமல் கொரோனா பரலவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக தாரிக் என்ற 14 வயது சிறுவனை, அவர் ஓட்டிசம் என்ற மன வளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் பொலிசார் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவமும், அந்தச் சிறுவன் மனவளர்ச்சி குன்றியவர் என்பதை உறுதிப்படுத்துவதற்காக முதலில் அணுகிய அரச வைத்தியர் ஒருவர் முஸ்லிம்களினாலேயே கொரோனா வைரஸ் பரவுகின்றது என்ற வெறுப்புணர்வை வெளிப்படையாகக் காட்டியமையும் சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள் எத்தகைய நிலையில் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்பதைப் புலப்படுத்தி உள்ளன.

அது மட்டுமல்லாமல் அந்தச் சிறுவன் தாரிக் விடயத்தில் பொலிசார் சட்டத்தை நிலைநாட்டுவதற்காகக் காட்டிய அதிகாரத் தோரணை இராணுவ போக்கிலான மன நிலையை வெளிப்படுத்தி உள்ளது. மனவளர்ச்சி குன்றிய ஒரு சிறுவனை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய மனிதாபிமான தொழில்நெறிமுறையிலான ஒழுக்கப் பண்பாட்டை மீறியதன் மூலம் இந்த நாட்டின் பேரின மக்களாகிய சிங்கள  மக்களுடைய இனவாத மனப்பாங்கு எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கின்றது என்பதையும் வெளிக்காட்டி உள்ளது. “தாரிக் என்ற சிறுவன் தாக்கப்பட்ட …”   சிறுவன் தாரிக் தாக்கப்பட்ட விடயத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பொலிசார் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் வெறுப்புணர்வை வெளிப்படுத்திய மருத்துவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் இல்லை.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் இலக்கு வைத்து, கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிப்பரம்பலில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நோக்கத்தில் அந்த மாகாணத்தின் தொல்லியல் இடங்களைக் கண்டறிந்து பராமரித்துப் பேணுவதற்கான ஜனாதிபதி செயலணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய தலைமையில் இராணுவ மேலாதிக்கம் கொண்டதாக நயமிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த மாகாணத்தின் தொல்லியல் இடங்கள் பலவும் இந்து மக்களின் புராதன கோவி;ல்கள் அமைந்திருந்த இடங்களாகவும், சில தொல்லியல் இடங்களைச் சூழ்ந்த பிரதேசங்களில் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு நீண்டகாலமாக வசித்து வருகின்ற இடங்களாகவும் உள்ளன என்பது கவனத்துக்கு உரியது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்துக்கான செயலணியினால் அடையாளம் காணப்படுகின்ற தொல்லியல் இடங்களைச் சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, தொல்லியலைப் பேணுவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இந்தச் செயலணியின் நடவடிக்கைகளினால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை.

விடை தெரிந்த வினாக்கள்

இது ஒருபுறமிருக்க, பாதுகாப்பான நாட்டுக்கும், சட்டத்தை மதிக்கும் ஒழுக்கப் பண்புள்ள சமூகத்துக்குமான ஜனாதிபதியின் செயலணி உருவாக்கத்தை பொதுத் தேர்தலை நாடு எதிர்கொண்டுள்ள ஒரு தருணத்தில் நாட்டை முழுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே பலரும் நோக்குகின்றார்கள்.

முன்னைய ஆட்சியில் தேசியபாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டிருந்தது என்பது என்னவோ உண்மைதான். தேசிய பாதுகாப்பில் ஓட்டை விழுவதற்குக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும். அதற்குக் காரணமானவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும் அவசியம். ஏனெனில் தேசிய பாதுகாப்பு என்பது தேசிய அளவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயற்பாடாகும். எனவே, அது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். உயிர்த்த ஞாயிறு தின …” பாதுகாப்பு நிலைமை பலவீனமடைந்திருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் பின்னர் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்த குண்டுத் தாக்குதல்கள் நடந்து ஒரு வருடத்துக்கும் மேலாகின்றது.

இக்காலப்பகுதியில் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் எதுவும் ஏற்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு நிலைமை உறுதியாக இருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் ஏற்கனவே உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்கள்.

இது ஒரு விடயம். அடுத்ததாக சட்டத்தை மதிக்கின்ற ஒழுக்கப் பண்புள்ள சமூகம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதியின் இந்தச் செயலணியின் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும். சட்டத்தை மதிக்கின்ற ஒழக்கமுள்ள சமூகம் என்ற சொற்தொடர் பரந்து விரிந்த பொருள் பெறுமாணத்தைக் கொண்டிருக்கின்றது. சட்டத்தை நாட்டு மக்கள் மதிக்காமல் செயற்படுவதாகத் தெரியவில்லை. மக்கள் நாகரிகம் கொண்டவர்களாகவும் சட்டத்திற்கு அமைவாக நடப்பவர்களாகவுமே தங்களை நிரூபித்திருக்கின்றார்கள். ஏனெனில் இதுகால வரையிலும் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து சமூகத்தில் அமைதியின்மை ஏற்படுவதற்கான சம்பவங்கள் எதுவும் இடம்பௌவில்லை.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களையடுத்து, பௌத்த மதத் தீவிரவாதிகள்தான் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி இருந்தார்கள். இராணுவத்தினரும், பொலிசாரும் ஊரடங்கு நேர காவல் கடமையில் ஈடுபட்டிருந்த தருணத்தில் பட்டப்பகலில் இந்தத் தீவிரவாதிகள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் இறங்கி வன்முறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டடிருந்த வன்முறைகளின் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்கின்ற ஒழுக்கப் பண்பாட்டை மீறியவர்கள் யார்? சமூக ஒழுக்கத்துக்குக் கேடு விளைவித்தவர்கள் யார்? ; என்ற கேள்விகளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக விடை தெரிந்திருக்கின்றது.

மேலாண்மை அதிகாரம் கொண்ட ஆட்சிக்கான ஆரம்பமா?

இத்தகைய ஒரு நிலையில் சட்டத்தை மதிக்கின்ற ஒழுக்கப் பண்புள்ள சமூகத்தை உருவாக்குவதற்கு நாட்டின் அதி உயர் நிலையில் உள்ள படைத்தளபதிகளும், அரச புலனாய்வு பிரிவுகளின் தலைவர்களும், பொலிஸ் உயர் தலைமையும் எந்த வகையில் பங்களிக்க முடியும்? எந்த வகையில் செயற்பட முடியும்? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

நாட்டின் பாதுகாப்புக்கும் ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்குமான செயலணி ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷபின் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாட்டு முப்படைகளின் தளபதிகளும், புலானய்வு பிரிவுகளின் தலைமை நிலை மற்றும் பொலிஸ் தலைமை நிலை அதிகாரிகளுமே இந்தச் செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது உண்மையில் ஒரு செயலணி என்பதிலும் பார்க்க நாட்டின் அதி உயர் பாதுகாப்பு குழு என்றே தெரிகின்றது. மோசமான பாதுகாப்பு நெருக்கடி நிலைமையொன்று உருவாகும் போதுதான் இத்தகைய உயர்மட்ட பாதுகாப்புச் செயலணி அல்லது பாதுகாப்புக்கான குழு உருவாக்கப்படுவது வழக்கம். அதுவே உலக நாடுகளின் நடைமுறை என்று பணி ஓய்வு பெற்ற பாதுகாப்புத்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட ஒருவர் கூறியுள்ளார்.

நாடு கொரோனா வைரஸ் என்ற உலக நெருக்கடி நிலைமைக்குக் காரணமான நோயிடர் நிலைமையை எதிர்கொண்டிருக்கின்றது. இதனால் நாட்டின் சகல செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டவாறு தேர்தலை நடத்த முடியாத ஓர் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் நெருக்கடிகளும், நெருக்கீடுகளும் உருவாகி இருக்கின்றன.

இத்தகைய ஒரு நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கும் சட்டத்தை மதிக்கின்ற ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கும் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் இடங்களைக் கண்டறிந்து பௌத்த மதத்தின் பெருமைகளைப் பேணுவதற்குமாக ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்பட்டு, அந்தச் செயலணிகளின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது நாட்டின் ஜனநாயக நிலைமைகளை சீராக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகத் தோற்றவில்லை.

இந்த நடவடிக்கையானது சிங்கள பௌத்த மக்களுக்கு நாட்டின் நிலைமைகளை திரிபுபடுத்திக்காட்டி, நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் மட்டுமே நாட்டை நிர்வகிக்க முடியும், அந்தத் தலைமையின் கீழ் மாத்திரமே ஆட்சி நடத்த முடியும் என்ற அரசியல் ரீதியான மனப்பதிவை அந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாயச் செயற்பாடாவே தோன்றுகின்றது.

இந்த செயலணியின் மூலம் தேர்தல் காலச் சூழலிலும் தேர்தலின்போதும் பொதுமக்கள் இராணுவப் புலனாய்வு கண்களினால் இறுக்கமாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்ற தகவலும் வெளியிடப்பட்டிருக்கின்றது. மொத்தத்தில் பௌத்தத்திற்கே முதலிடம் – இராணுவத்திற்கே முழுமையான அங்கீகாரம் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நிறைவேற்றதிகாரம் என்ற தனி மனித அதிகார மேலாண்மை கொண்ட ஆட்சி நிலைமையை நோக்கி நாடு நகர்த்தப்படுவதாகவே தெரிகின்றது.

பி.மாணிக்கவாசகம்