நாளை முதல் மீண்டும் செயற்படவுள்ளது வவுனியா அம்மாச்சி உணவகம்

350 0

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் திறக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பணிமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி அருந்ததிவேல் சிவானந்தன் தலைமையில் அம்மாச்சி உணவகத்தின் ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாளை முதல் மீளவும் அம்மாச்சி உணவகத்தின் செயற்பாடுகளை ; ஆரம்பிக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுகாதார நடைமுறையை பின்பற்றியும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி ஒத்துழைப்புக்களை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த அம்மாச்சி உணவகம் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் ஒரே ஒரு உணவகமாகும்.

இது மூடப்பட்டுள்ளமையால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் உணவு வகைகளை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்துள்ளதுடன் கடமைகளுக்கு செல்லும் அரச, தனியார் துறை ஊழியர்கள் , வைத்தியர்கள் , தாதியர்கள் பல்கலைக்கழக மணவர்கள் எனப்பலரும் அம்மாச்சி உணவகத்தை மீளவும் திறக்குமாறு பல முறைப்பாடுகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.