சிறிலங்காவில் கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுகின்றது

298 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் ஓகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

விமான நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் புதிய செயற்திட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளவே திட்டமிட்டிருக்கின்றோம். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கைககு வரும் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன்  அறிக்கையை அவ்விடத்திலே கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

பரிசோதனை அறிக்கை வரும்வரை, அவர்களை விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அத்துடன் பி.சி.ஆர். பரிசோதனைகளை துரிதப்படுத்துவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட பரிசோதனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது” என்றார்.