மிலேனியம் தொடர்பான விசேட குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்- ஜே.வி.பி

299 0

மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி, ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியினால், ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவிற்கே இந்த கடிதம் நேற்று (திங்கட்கிழமை) அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகிக் கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக தெளிவுபடுத்தல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஒக்டோபர் மாதத்தில் முன்னாள் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியான பின்னர், இதுதொடர்பான சர்ச்சை நாட்டில் தீவிரமடைந்தது.

எனினும், இதற்கு பலத்த எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதால் நவம்பரில் செய்யப்படவிருந்த கைச்சாத்து நடவடிக்கைள் கைவிடப்பட்டன.

இதனால், அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பேசப்பட்ட பிரதான விடயமாகவும் மிலேனியம் சவால் ஒப்பந்தம் காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த ஒப்பந்த விவகாரம் குறித்து கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் விசேட அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டது.

அதில் நவம்பர் 16 ஆம் திகதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதியுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் தற்போதைய அரசாங்கம் மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் மீண்டும் ஆராய்வதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்றை நியமித்தது.

இந்தக் குழு நியமிக்கப்பட்டு தற்போது 6 மாதங்களை அண்மித்துள்ள நிலையிலேயே, ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலைமைக்குள் அரசாங்கம் மிலேனியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் எந்தளவிற்கு உண்மை தன்மை உடையவை என்பது தொடர்பாக நாட்டு பிரஜை என்ற ரீதியில் கேட்டுக் கொள்வதாகவும் அவரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.