உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர், நெடுஞ்சாலையில் தனது ஆதரவாளரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டும்போது சமூக விலகலை கடைப்பிடிக்காதது சலசலப்பை ஏற்படுத்தியது.
நாடு மழுவதும் கொரோனா பரவல் உள்ளதால் மக்கள் வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மால்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் ஓட்டல்கள் என திறக்கப்பட்டபோதிலும், அங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், பல்வேறு இடங்களில் இந்த கட்டுப்பாடு மீறப்படுகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் ஒருவர் நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். இதற்காக நொய்டா மாவட்டத்தில் உள்ள கிழக்கு புற நெடுஞ்சாலையில் ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். சாலையோரம் நிறுத்தப்பட்ட காரின் பேனட்டில் வைத்து கேக் வெட்டப்பட்டது.
அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குட்டு பண்டிட், கேட் வெட்டினார். அப்போது சமூக விலகலை கடைப்பிடிக்காமல் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டு நின்றனர். முக கவசமும் அணியவில்லை. இதுதொடர்பான வீடியோ பண்டிட்டின் பேஸ்புக்கில் வெளியானது.