சிறிலங்காவில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் எவருக்கும் தற்போதைய நிலையில் சிறப்பு சலுகை வழங்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்துக்கு கிடையாது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது பிரதான பொறுப்பாக உள்ளதாக குறிப்பிட்டார்.
நீதிமன்றம் கலைக்கபட்டமை மற்றும் பொதுத்தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு எதிராகவும் எதிர் தரப்பினர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்கள்.
எனினும் நீதிமன்றம் மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொருட்டு தாக்கல் செய்த மனுக்கலை இரத்து செய்தது. சுகாதாரப்பிரிவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தில் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
அத்தோடு, விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை நிராகரித்த அமெரிக்க இராஜதந்திரி தொடர்பாக மாறுப்பட்ட கருத்துக்கள் அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படுகின்றன என்றும் அரசாங்கம் அமெரிக்காவிற்கு சிறப்பு சலுகையினை வழங்க வேண்டிய தேவை கிடையாது என்றும் அமைச்சர் தினேஸ் தெரிவித்தார்.
வியன்னா ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த அமெரிக்க இராஜதந்திரி பி.சி.ஆர். பரிசோதனையை புறக்கணித்தமை தவறான செயற்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், மற்றும் தூதுவர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என இலங்கையில் உள்ள அனைத்து தூதுவராலயங்களுக்கும் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.