தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமாம்!

238 0

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்- கலாநிதி குணதாச அமரசேகர

தமிழ்தேசிய கூட்;டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து நாட்டின் தற்போதைய அரசியல் தலைமை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு பின்பற்றுக்கின்ற தந்திரோபாயம் குறித்து அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை,அரசாங்கத்திற்கும் எந்த அரசியல் கட்சிக்கும் எவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்போம் என அளித்த வாக்குறுதியிலிருந்து அரசாங்கம் பின்வாங்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை ஏற்கவில்லை என அதன் உயர் தலைமை சமீபத்தில் அறிவித்துள்ளமை அரசாங்கத்துடன் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தீவிர முயற்சிகளை எடுப்பதை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கவனக்குறைவாக விடுதலைப்புலிகளை நிராகரித்திருக்கமாட்டார் என தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் கருத்தினை கட்சியின் தலைவர் சம்பந்தனும்,உலக தமிழ் பேரவையும் அங்கீகரித்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்புடனான ஈடுபாடுகளில் அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் 2001 இல் விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு இறுதிவரை வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் உறுதியாகநின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது 6.9 மில்லியன் மக்கள் நம்பிக்கைக்கு துரோகமிழைக்கவேண்டாம் என அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்பகுதி வாக்காளர்களிற்கு ஏமாற்றமளிக்ககூடிய நிகழ்ச்சிநிரலை அரசாங்கம் பின்பற்றக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் தனது செல்வாக்கு குறைந்து வருவதன் காரணமாகவும் ஐக்கியதேசிய கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளதால் ஜெனீவா குறித்த அதன் நிலைப்பாடு என்னவென தெளிவுபடுத்துமாறு அரசாங்கம் கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.