உலகின் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், சோலார் சிட்டி நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய எலான் மஸ்க்தான், சோலார் சிட்டி நிறுவனத்தையும் நிறுவினர். சூரிய ஒளி மூலம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் மற்றும் பவர் வால்கள் என்று இரண்டு முக்கிய தயாரிப்புகள் கொண்ட நிறுவனம் இது.
இரண்டு நிறுவனங்களையும் இணைத்து விட முடிவு செய்த மஸ்க், அதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். அதன் படி டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் சோலார் சிட்டி நிறுவனத்தை வாங்கியது.
டெஸ்லா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள், சோலார் சிட்டி தயாரிப்புகளுக்கும் வாடிக்கையாளர்கள் ஆகும் வாய்ப்பு உள்ளதால் இரண்டும் ஒரே குடையின் கீழ் செயல்படுவது சிறந்ததாகும் என்று மஸ்க் முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்த நிறுவனங்களின் இணைப்புக்காக பங்கு தாரர்களின் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எதிர்கால திட்டங்கள் குறித்து எலன் மஸ்க் விவரித்தார். அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் வீடுகளுக்கு அமைக்கும் கூரையுடன் சோலார் பேனல்கள் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்தார்.
அமெரிக்க வீடுகளுக்கு கூரை அமைப்பது என்பது ஒரு முக்கிய செலவாகும். கான்க்ரீட் இல்லை என்பதால், ஆலங்கட்டி மழை, புயல் போன்ற இடர்பாடுகளால சேதம் அடையும் வாய்ப்புகளும் உண்டு.
அதாவது கூரை என்பது ஒரு தடவை மட்டும் என்று இல்லை. அவ்வப்போது மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். கூரைக்கான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் சந்தையைப் பிடிக்கும் முயற்சியில் எலன் மஸ்க் இறங்கியுள்ளார்.
சாதாரண கூரைக்கான செலவும் சோலார் பேனலுடன் கூடிய கூரையும் ஒரே விலையில் அல்லது குறைவான விலையில் கிடைக்கப் போவதாக அறிவித்து உள்ளார். அதாவது கூரையை மாற்றினால் வீட்டுக்கு மின்சாரம் இலவசம் என்று ஆகிவிடுகிறது.
சாதாரண கூரைகளை விட சோலார் கூரைகள் பலம் வாய்ந்தவை என்றும் கூறுகிறார். அதனை விளக்கும் வீடியோவும் வெளியிட்டுக் காட்டப்பட்டது.
தற்போது மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் என்று தனியாக வினியோகம் நடைபெறுகிறது. இயற்கை ஆர்வலர்கள் பலரும் அந்த வகை மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இனி புது டிசைன்களுடன் கூரையிலே இலவச மின்சாரம் என்றால் அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அல்லவா!