உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடராஜா ரவிராஜின் உருவச்சிலை திறப்புவிழா நேற்றுமாலை சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘ரவிராஜ் கொலை யாரால் செய்யப்பட்டது? ஏன் செய்யப்பட்டது? என்பது தொடர்பில் தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. ரவிராஜ் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டார். தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிரிகள் இல்லை. அவர் எவரையும் புண்படுத்தவில்லை. அவர் அரசியல் ரீதியாக மிகவும் நிதானமாக செயற்பட்டார். எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் நியாயமான நிரந்தர தீர்வு வருவதாக இருந்தால், அந்த விடயத்தில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள மக்களும் பங்காளியாக இருக்க வேண்டும் என்றே செயற்பட்டார்.
புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கி, அந்த பங்களிப்பு அத்தியாவசியமானது என கூறி பல முயற்சிகளை மேற்கொண்டார். சிங்கள மக்களுக்கு விளங்கக்கூடிய வகையில் தமிழ் மக்கள் நண்பர்கள் உங்களின் உரிமைகளை நாங்கள் பறிக்க முயற்சிக்கவில்லை எனக்கூறி நமக்கான உரிமைகளை வெல்லக்கூடிய வகையில், தீவிரமாக செயற்பட்டார். அந்த புனிதமான கடமையினை நிறைவேற்றியதன் காரணமாக கொலை செய்யப்பட்டார். அந்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருந்தால் அதில் அரசியல் பின்னணி இருக்கின்றது.
எமது மக்களின் உரிமை மற்றும் தேவைகளைப் பொறுத்தவரையில் மிகவும் உணர்வுடன் செயற்பட்டார். வடமாகாணத்தில் உக்கிர யுத்தம் நடைபெற்ற போதும், மக்களுக்கு பல துன்பங்கள் ஏற்பட்ட போதும், மக்களுக்கு பல வித உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் ஆர்வமாக இருந்தார். தனது கடமையினை செய்வதில் பின் நிற்கவில்லை. எந்த காரணத்தின் நிமித்தமும் தமது கடமையினை தவறாத ஒருவராக இருந்தார்.
சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்றி சிங்கள தலைவர்கள் மத்தியிலும் பாரிய மதிப்பு அவருக்கு இருந்தது. எமது மக்களின் பிரச்சினையை என்ன நடைபெற்றாலும், பேச்சுவார்த்தையின் மூலம் நியாயமான தீர்வினைக் காணலாம். அந்த முயற்சியை கைவிடாது, அந்த முயற்சியில் தீவிரமாக செயற்பட வேண்டுமென்று உறுதியாக இருந்தார். தற்போது உயிருடன் இருந்திருந்தால், பாரிய பங்களிப்பாக இருந்திருக்கும். அவரது இறப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும், தமிழ் தேசியகூட்டமைப்பினைப் பொறுத்தவரையிலும் பாரிய இழப்பாக நினைக்கின்றேன்.
அவரது குடும்பத்தினருக்கும் பாரிய இழப்பாக கருதுகின்றேன். இந்த நினைவுக்கூட்டத்தில் கலந்துகொண்டமைக்காக திருப்தியடைகின்றேன்.
இன்று முக்கிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். நீண்ட காலமாக கிடைக்கப்பெற முடியாத எமது பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தற்போது ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அந்த தீர்வினை அடைவது மிகக் கடினமான பயணமாக இருக்கும். அரசியல் சாசனம் சம்பந்தமாக 6 உப குழுக்கள் நியமிக்கபட்டு அரசியல் சாசன சபை உருவாக்கப்பட்டு அரசியல் தீர்வு சம்பந்தமான கருமங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை பிரதமர் தலைமையில் ஆராயப்பட்டு வருகின்றது. சில விடயங்கள் முழுமையாக ஆராயப்படவில்லை. அவை பிறகு ஆராயப்படுமென நினைக்கின்றேன். இறுதி முடிவுகள் பல விடயங்கள் குறித்து இன்னும் எடுக்கப்படவில்லை.
ஆனால், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையில் பல கட்சியை சார்ந்தவர்கள் பங்குபற்றி வருகின்றார்கள். ஐ.தே.க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி. ஏனைய முஸ்லீம் கட்சிகள், மலையக கட்சிகள் அனைவரும் ஆக்கபூர்வமாக முழு அரசியல் சாசனத்தினை உருவாக்கவேண்டுமென்று ஒருமித்து செயற்பட்டு வருகின்றோம். மகிந்த ராஜபக்ஷவின் எதிரணியினரும் அந்த குழுவில் இருக்கின்றார்கள். அவர்களின் நிலைப்பாட்டினை 14 அம்சங்கள் அடங்கிய அறிக்கையினை முன்வைத்துள்ளனர். காலப்போக்கில் அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்குமென எமக்கு தெரியாது. எதிர்ப்பு இல்லாமல் இல்லை. இன்னும் எதிர்ப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. இருந்தும், இவற்றினை குழப்புவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போதைய மாற்றங்கள். எமது தேசிய பிரச்சினையினை தீர்க்க கூடிய வகையில் புதிய அரசியல் சாசனத்தினை உருவாக்ககூடிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களை இழந்துள்ளோம். இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சி ஏற்பட வேண்டுமென்ற போது, அதை ஆதரிக்க வில்லை. சமஷ்டி ஆட்சி முறையை ஆதரிக்கவில்லை. சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் சந்தர்ப்பம் இருந்தது. ஒரு அரசியல் தீர்வினை அடைவதற்கு அந்த சந்தர்ப்பம் நழுவிப் போய்விட்டது.
அந்த காலத்தில் ஆக்க பூர்வமாக நடந்துகொள்ளவில்லை. 2002 மார்கழிமாதம் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்க இருந்த போதும், அந்த முயற்சி ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. அந்த சந்தர்ப்பத்தினை நாம் இழந்தோம். மகிந்தவின் காலத்தில் சர்வதேசத்தினை திருப்திப்படுத்துவதற்காக பல வாக்குறுதிகளை அளித்திருந்தும், அவற்றினை நடைமுறைப்படுத்தவில்லை. எம்மை ஏமாற்றுவதற்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார். இருந்தும் நாம் ஏமாற்றப்படவில்லை. அரசியல் தீர்வு குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லாம் முடிந்துவிட்டதென்றும் சொல்ல முடியாது.
அனைத்தும் நடந்துவிட்டதென்றும் சொல்ல முடியாது. அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியும் பிரதமரும், உறுதியுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்வரும் 10 ஆம் திகதி நடவடிக்கை குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கின்றோம். தற்போது உப குழுக்களின் அரசியல் அமைப்பு சபையின் முன்னால் விவாதம் நடைபெறுகின்றது. இந்த கருமங்களில் மக்களும் பங்குகொள்ள வேண்டும். மக்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகின்றோம். யாருடைய கருத்துக்களையும் உதாசீனம் செய்யவில்லை.
அரசியல் தீர்வு சம்பந்தமாக பல முயற்சிகள் நீண்டகாலமாக நடைபெற்று வந்திருக்கின்றன. பல்வேறு நாடுகளில் அரசியல் தீர்வு சம்பந்தமாக பல்வேறு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. எல்லாம் முடிந்து விட்டதென எண்ணாமல், கருமத்தில் வெற்றிகொள்வதென்றால், நம்பிக்கையுடன் நிதானமாக செயற்பட வேண்டும். நம்பிக்கையுடன் நிதானமாக செயற்படாவிடின், எதையும் அடைய முடியாது. இன்று அரசியல் தீர்வு தமிழர்களுக்கு மட்டும் தேவையானதல்ல. நாட்டுக்கும் தேவையானது. கடன் சுமையில் இருந்தும், பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மீட்சி பெற அரசியல் தீர்வு எமக்கு மாத்திரமல்ல. பெரும்பான்மை மக்களுக்கும் நாட்டிற்கும் அத்தியாவசியமானது.
மனித உரிமை சாசனத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமாயின் அரசியல் தீர்வு இந்த நாட்டிற்கு தேவை. உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.. இவை அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் ஒரு அரசியல் தீர்வு எமக்கு மாத்திரமல்ல. அரசாங்கத்திற்கும் தேவைப்படுகின்றது. அப்போது சர்வதேச சமூகத்தின் ஆதரவு எமக்கு இருக்கவில்லை.
இவை அனைத்தினையும் பயன்படுத்தி நிதானமாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டு, பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கருமத்தினை முன்னெடுக்க வேண்டும். அது எமது கடமையும் ஆகும். ரவிராஜ் இருந்திருந்தால், இந்த கருமத்தினை நிறைவேற்ற பங்களித்திருப்பார். இந்த கருமங்களை நிறைவேற்ற வேண்டியது எமது கடமை என தெரிவித்தார்.