மலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் நீக்கப்பட்டதாக ஊடகத்தின் வாயிலாகவே அறிந்தேன். மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் பிரகாரம் நான் நீக்கப்படவில்லை. எனவே, நானே பிரதிச் செயலாளர் நாயகமாக இன்றளவிலும் இருக்கின்றேன் என அனுஷா சந்திரசேகரன் அறிவித்திருக்கினறார்.
கட்சியிலிருந்து அனுஷா சந்திரசேகரனை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ள மலையக மக்கள் முன்னணி, அவர் வகித்த பிரதி பொதுச்செயலாளர் நாயகம் பதவிக்கும் புதியவர் ஒருவரை நியமித்துள்ளது. இது தொடர்பில் கேட்டபோதே அனுஷா மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
நான் பதவியிலிருக்கும்போதே இன்னொருவரை நியமித்தமைக்கு எதிராக வேண்டுமானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். புரட்சித் தலைவன் அமரர் சந்திரசேகரனின் மகளாக சட்டம் படித்த ஒரு சட்டத்தரணியாக இவ்வாறான ஊடக அறிக்கைகளினால் ஒருபோதும் என்னைப் பின்னடையச் செய்யவோ அல்லது என்னுடைய அரசியல் பயணத்தைத் தடுக்கவோ முடியாது.