வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1200 நாட்களிற்கும் மேலாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று காலை 11.30மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் போன தனது மகனை தேடி பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து உயிரிழந்த தந்தையான சின்னசாமி நல்லதம்பியின் உருவம் தாங்கிய பதாதையை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்ததுடன், மலரஞ்சலியும் செலுத்தி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
வடக்கில் பல வருட காலமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்களது பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமாறு, மாறி மாறி வரும் அரசாங்கத்திடம் கோரி வருகின்றனர்.
ஆனால் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அக்கறை செலுத்தவும் இல்லை. அவர்களுக்கு உரிய தீர்வினை வழங்கவும் இல்லை. இதனால் இவர்கள் சர்வதேச விசாரணையை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இருப்பினும் இவ்விடயத்தில் சர்வதேசம் கூட உரிய நீதியை அவர்களுக்கு இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை.
இந்நிலையில் இந்த மக்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொடர்ந்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.