ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னதாக, இரண்டு ஜனாதிபதி செயலணிகளை உருவாக்குதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறார்.
முதலாவது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கமான, பண்பான, சட்டத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி.
இரண்டாவது, கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர், பௌத்த பீடங்களின் உயர்மட்டக் குழுவை மாதம் தோறும் சந்தித்து வருகிறார்
அவ்வாறான இரணடாவது சந்திப்பு அண்மையில் நடந்த போது, கிழக்கில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில், ஒரு ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும் என்று அவர் உறுதியளித்திருந்தார்.
கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்தே, அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.
முஸ்லிம்களும், தமிழர்களும் இந்தச் செயலணிக்குப் பின்னால், தமக்கு எதிரான மிகப்பெரிய சதி இருப்பதாகவே கருதுகின்றனர்.
இவ்வாறான நிலையில், கடந்த புதன்கிழமை கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்தச் செயலணியில், இடம்பெற்றிருப்பவர்கள் அனைவரும், சிங்களவர்களாகவே இருக்கின்றனர்.
இராணுவத்தினரும், பௌத்த பிக்குகளும், அதிகாரிகளும் இடம்பெற்றுள்ள இந்தச் செயலணியில், எந்தவொரு தமிழ்பேசும் உறுப்பினரும் இல்லை.
கிழக்கில் தமிழ் பேசும் மக்களே அதிகமாக வாழுகின்ற போதும், தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்கள் ஏராளமாக காணப்படுகின்ற போதும், தனிச் சிங்களப் பிரதிநிதிகளைக் கொண்ட, ஒரு செயலணியை அமைத்திருக்கிறார் ஜனாதிபதி.
தனிச் சிங்கள மற்றும் பௌத்தர்களைக் கொண்ட இந்தச் செயலணி, எதைச் செய்யப் போகிறது என்பதை கூறித் தெரிய வேண்டியதில்லை.
அந்த அச்சுறுத்தல் ஒரு புறத்தில் இருக்க, பாதுகாப்பான நாடு மற்றும் ஒழுக்கமான, பண்பான, சட்டத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி முற்றிலும் படை அதிகாரிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தான் தலைவர். முப்படைகளின் தளபதிகள், புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள், பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய இந்தச் செயலணியானது, நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் மாத்திரமன்றி, ஒழுக்கமான, பண்பான, சட்டத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான விடயங்களிலும் கவனம் செலுத்தப் போகிறது.
இந்தச் செயலணிக்கு இடப்பட்டுள்ள பெயர், இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை, பாதுகாப்பு இல்லை, ஒழுக்கமான, பண்பான, சட்டத்தை மதிக்கும் சமூகம் இல்லை& என்ற புரிதலையே வெளிநாட்டவர்களுக்குக் கொடுக்கக் கூடும்
நாட்டில் ஏற்கனவே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்க நிறுவன கட்டமைப்புகள் உள்ள நிலையில், இந்தச் செயலணியின் உருவாக்கம்- அதுவும் முற்றிம் படை மயப்படுத்தப்பட்ட ஒன்றாக உருவாக்கப்பட்டிருப்பது, சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அத்துடன், இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சி முறை ஒன்றை நோக்கி நாடு நகரத் தொடங்கியிருப்பதையும் இந்தச் செயலணியின் உருவாக்கம் தெளிவாகவே காண்பித்திருக்கிறது.
ஏற்கனவே, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
முன்னாள் படை அதிகாரிகள் பலர் சிவில் நிர்வாக கட்டமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்புகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புதிதாக இரண்டு செயலணிகளிலும், படை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை யாரும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.
ஜனநாயக நாடு ஒன்றின் மரபுகளை மீறி, முக்கியமான அமைச்சுக்களின் செயலாளர்களாக மாத்திரமன்றி, செயலணி என்ற பெயரிலும், இராணுவ அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த நியமனங்கள் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டின் நாடாளுமன்றம், அமைச்சரவை என்பனவற்றுக்குப் பொறுப்புக் கூறாமல் தனக்கு விசுவாசமான செயலணிகளின் மூலம் நாட்டை நிர்வகிக்க முயற்சிக்கிறார் என்பது போன்ற கருத்துக்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
செயலணிகளின் ஆட்சியாக இது மாறிக் கொண்டிருக்கிறது. இந்தச் செயலணிகளுக்கு பெரும்பாலும் இராணுவ அதிகாரிகள் தான் தலைவர்களாக – உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே முக்கியமான விடயம்.
பலநோக்கு அபிவிருத்தி செயலணி, வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார செயலணி, கொரோனா ஒழிப்புக்கான செயலணி, போன்ற செயலணிகள் பல தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான், புதிதாக இரண்டு செயலணிகள் அண்மையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, ஆங்கிலத்தில் Task Force என்று அழைக்கப்படும் அதிரடிப்படைகளின் உருவாக்கம் தீவிரமடைந்திருந்தது.
இறுதிக்கட்டப் போருக்காக உருவாக்கப்பட்ட அந்த Task Force, அப்போது அதிரடிப்படை என்று அழைக்கப்பட்டது. ask Force, என்பது, இராணுவ மொழியில் அதிரடிப்படை என்று அழைக்கப்படும், நிர்வாக மொழியில் செயலணி கூறப்படும்.
இறுதிக்கட்டப் போரில், 58 ஆவது டிவிசன் முதலில் Task Force-1 என்று தான் அழைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட படைப்பிரிவுகளும் Task Force என்றே அழைக்கப்பட்டு வந்தன.
ஆரம்பத்தில் இந்த படைப்பிரிவுகள், ஒரு டிவிசனுக்குப் போதுமான ஆளணி மற்றும் ஆயுத, நிர்வாக கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால் அரை டிவிசன்கள் என்று அழைக்கப்பட்டன.
அவ்வாறான படைப்பிரிவுகள் ஆரம்பத்தில் Task Force என்றே கூறப்பட்டது. பின்னர், அவை முழுமை பெற்ற நிலையில் தான், Task Force என்ற அடையாளம் மாற்றப்பட்டு டிவிசன்களாக ஒழுங்கமைக்கப்பட்டன
அதுபோன்று தான், தற்போது கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும், Task Force ஆட்சி உருவாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான செயலணிகள், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கோ, அல்லது அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ பொறுப்புக்கூற வேண்டியதில்லை. ஏனென்றால் இது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணிகள்.
இந்தச் செயலணிகள் ஜனாதிபதிக்கு நேரடியாக கட்டுப்படும். ஜனாதிபதியே நேரடியாக இவற்றைக் கட்டுப்படுத்துவார்.
ஜனாதிபதிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன், தேவைப்படும் இடங்களில் அரச நிர்வாக செயற்பாடுகளிலும் தலையீடுகளைச் செய்யக் கூடியவையாக இருக்கும்.
இது நாடாளுமன்றம், அமைச்சரவை, ஜனாதிபதி என ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஜனநாயக ஆட்சிமுறைக் கட்டமைப்புக்குப் புறம்பாக – நேரடியாக ஜனாதிபதியே விவகாரங்களைக் கையாளுவதற்கான ஒரு அணுகுமுறையாகவும் பார்க்கப்படுகிறது.
ஜனநாயகம் என்பது, நேரயாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நடத்தப்படும் ஆட்சி முறை.
ஆனால், இங்கு ஜனாதிபதி மாத்திரமே மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவர் தனக்கு நெருக்கமான, விசுவாசமான அதிகாரிகளைக் கொண்டு ஒரு இராணுவ பாணியிலான நிர்வாகத்தை நடத்த முனைகிறார்.
இந்த நிர்வாக ஒழுங்குமுறைக்குள் அரசாங்கம் வருகின்ற போது, அமைச்சர்களும், நாடாளுமன்றமும் டம்மிகளாக மாற்றப்பட்டு விடும்.
இவ்வாறானதொரு ஆபத்தான நலையை நோக்கித் தான் இலங்கை நகர ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பத்தில் கோத்தாபய ராஜபக்ச வடக்கு, கிழக்கின் மீது இராணுவ பலத்தை பிரயோகிக்க ஆரம்பித்த போது, இராணுவ அதிகாரம் திணிக்கப்படுவதாக தமிழர்கள் குரல் எழுப்பினர். அதனை கண்டு கொள்வதற்கு யாரும் அப்போது முன்வரவில்லை.
ஆனால் இப்போது இந்த இராணுவ நெருக்குவாரம், தெற்கிலும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருக்கிறது. தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடித்துக் கொள்ளுமாம்.
அதுபோலத் தான், சிங்கள மக்கள் கூட, இப்போது தமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இராணுவ அதிகாரம் மாறி வருவதாக அச்சத்துடன் பார்க்கின்ற நிலை தோன்றியிருக்கிறது.
இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர்கள் கூட, தலையில் அடித்துக் கொள்ளும் விரைவில் வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஏனென்றால், இது செயலணிகளின் அரசாங்க மாற்றப்பட்டு வருகிறது.
சுபத்ரா