சிறிலங்காவில் பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிக்க போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை ஜனநாயக தன்மைக்கு முரணான செயற்பாடாகும் என்பதோடு சாதாரண வாக்களிப்பு செயற்பாடுகளுக்கு இது சிக்கலை தோற்றுவிக்கக் கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சட்டதரணி சிறால் லக்திலக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் மக்களின் மீது எந்தவித அக்கறையும் இன்றி செயற்படுகின்றது. நாட்டில் தற்போது பசளை தட்டுப்பாடு பொருட்களின் விலை அதிகரிப்பு, ஒழுங்கான வருமானம் இன்மை, தொழில் வாய்ப்பு இன்மை போன்றவற்றுடன், ஏற்கனவே இருந்த தொழிலும் சிலருக்கு இல்லாமல்போயுள்ள நிலையில், அரசாங்கம் மக்களுக்கான சலுகைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக சிந்திக்காது இராணுவ ஆட்சியை முன்னெடுப்பது தொடர்பிலே அக்கறை செலுத்தி வருகின்றது.
இந்நிலையில் எமது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் தற்போது பொலிஸார் சேகரித்து வருகின்றனர். அந்த தகவல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டு பாதுகாப்பாக பேணப்படுவதை விடுத்து, அதற்கு மாறாக இதனூடாக பழிவாங்கல்களை முன்னெடுக்க முயற்சிக்ககூடாது.
இதேவேளை, பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிக்க போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஜனநாயக தன்மைக்கு முரணான செயற்பாடாகும். இது சாதாரண வாக்களிப்பு செயற்பாடுகளுக்கு சிக்கலை தோற்றுவிக்ககூடும்.
இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கத்தினால் வெற்றிக்கொள்ளமுடியும் என்று ஆளும் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபோதும் சாத்தியமாகாது. அரசாங்கத்தின் நிலையும் எதிர்க்கட்சியின் நிலையும் சமாந்திரமாகவே இருக்கின்றது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது என்பது முடிந்த காரியமல்ல.
அரசாங்கம் மக்கள் மத்தியில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து வந்தாலும் ஆளும் தரப்பில் சிலர் தேர்தலை புறக்கணிக்க முயற்சிக்கின்றனர். இதேவேனை சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதால் வாக்களிப்பு வீதம் குறைவடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இவ்வாறான நிலையில், இதனூடாக மிக பயனடையக்கூடியவர்கள் யார் என்பது தொடர்பாக மக்கள் நன்கு சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும். தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதன் எண்ணத்திலே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.