மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

316 0

srinesan-mpமட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தனக்கு உத்தரவாதம் அளித்துள்ளார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

நீதியமைச்சரை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து  சனிக்கிழமை (19) சந்தித்தபோது, விகாராதிபதியின் அடாவடித் தனங்கள் குறித்தும் அவரது நடவடிக்கைகள் குறித்தும் முறையிட்டேன். இதன்போதே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் என்றும் அவர் கூறினார். நீதியமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில், ஸ்ரீநேசன் எம்.பி மேலும் தெரிவிக்கையில், ‘ மட்டக்களப்பில் விபரீதமான நிலையினை உருவாக்கக் கூடிய விதத்தில், மங்களராமய விகாராதிபதி சுமணரத்ன தேரர் அடாவடித்தனமாகச் செயற்பட்டு வருவதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கின்றது.  சட்டவாட்சிக்கும் இயல்பு நிலைக்கும் எதிராகச் செயற்படும் சுமணரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்காது விட்டால், நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

அமைதியான சூழலைக் குழப்பி மீண்டும் இனவாதச் சூழலை உருவாக்கிக் காட்டாட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு ஏற்ற விதத்தில் குறித்த விகாராதிபதி செயற்பட்டு வருகின்றார். பௌத்த மதத்துக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள முதன்மை ஸ்தானத்தை தேரர், துஷ்பிரயோகம் செய்து வருவதைக் காணமுடிகிறது. மட்டக்களப்பில், பௌத்த மதத்தின் தர்மத்தினை சொல்லாலும் செயலாலும் விளக்க வேண்டிய தேரர் அதனை விடுத்து பௌத்தத்தின் மகத்துவத்தினையும் புனிதத்துவத்தினையும் குறைக்கக் கூடிய விதத்தில் செயற்படுவதுடன், சிறுபான்மை இனத்தையும் மக்களையும் மிகவும் இழிவாகப்  பேசிவருகின்றார்.

இவருக்குப் பின்னால் சில அரசியல்வாதிகள் தமது நிகழ்ச்சி நிரலுடன் இருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகிறது. தேரரின் இந்த செயற்பாடுகள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்காவிடின், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களிலும் பெரும் விவரீதங்கள் ஏற்படும்’ என எடுத்துரைத்தேன். இதன்போது, இந்தவிவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார் என்றார்.