கிழக்கு மாகாண தமிழர்ளின் இருப்பும் கேள்விகுட்படுத்தப்பட்டுள்ளது! – தமிழ்த் தலைவர்கள்

546 0

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகளும் நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச்செல்வதற்கான ஆபயவொலிகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தலைவர்கள் ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ சர்வாதிகாரப் போக்கில் நிருவாகத்தினை முன்னெடுத்து வருவதாகவும் கிழக்கு மாகாண தமிழர்ளின் இருப்பும் கேள்விகுட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஜனாதிபதியின் சர்வாதிகாரப்போக்கானது சீனாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தவுள்ளதாகவும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன்ரூபவ் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோரே இத்தகைய கருத்துக்களை முன்வைத்துள்ளர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான 11பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி மற்றும் பாதுகாப்பான நாடொன்றை, ஒழுக்கநெறியுள்ள, குணநலன்கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான 13பேர் ஜனாதிபதி செயலணி ஆகியன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல்குணரட்ண தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இச்செயலணிகளின் நியமனம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவை வருமாறு

மாவை.சோ.சேனாதிராஜா கூறுகையில்,

கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக நிலம். வரலாற்றுப் பிரதேசம் இதனை நன்கு தெரிந்து கொண்ட சிங்கள பெருந்தேசியத்தலைவர்கள் காலங்காலமாக கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழர்களை வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

திருச்செல்வம் அமைச்சராக இருந்தபோது கோணேஸ்வரர் பூமியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்தார். அச்சமயத்தில் சேருவிலவைச் சேர்ந்த தேரர் எதிர்ப்பதால் அனுமதி அளிக்க முடியாது என்று டட்லி சேனநாயக்க குறிப்பிட்டு நிராகரித்தார்.

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தேரர்களின் மதவாத சிந்தகைளுக்குள் ஆட்சியாளர்கள் கட்டுண்டு தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார்கள்

அதுபோன்று தான் கோத்தாபய ராஜபக்ஷவும் தனது ஆட்சியையும் சர்வாதிகாரப்போக்கையும் முன்னெடுப்பதற்காக தேரர்களின் ஆதரவை பெறும் வகையில் அவர்களின் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு தாரளமாக இடமளித்துள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இந்த செயலணிகள் நிச்சயமாக தமிழர்களின் இருப்பினை அழிப்பதையே இலக்காக கொண்டு செயற்படபோகின்றன. அதேபோன்று அந்த செயற்பாட்டிற்கு இராணுவத்தினைக் கொண்டு அடக்குமுறையும் அச்சுறுத்தலும் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் நோக்கமும் இருக்கின்றமையும் தெளிவாகின்றது.

மேலும், எமது மக்களின் இனப்பிரச்சினை பற்றி இந்த ஆட்சியாளர்களுடன் நாம் பேசுவதற்கு முனைப்புக் கொண்டிருந்தபோதும் கோத்தாபயவின் இத்தகைய செயற்பாடுகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு தரமாட்டேன் என்பதை மட்டுமல்ல தமிழர்களின் இருப்பிற்கே இடமளிக்க மாட்டேன் என்பதை சொல்லாமல்செல்லிவிட்டார்.

எவ்வாறாயினும் தமிழ் மக்களின் உரிமைகளையும் அவர்களின் பூர்விகத்தினையும் இழப்பதற்கு நாம் இடமளிக்கமுடியாது. அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கல் அதன் ஊடாக சிங்கள பௌத்தவாத்தினை விதைத்தல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

சி.வி.விக்கினேஸ்வரன் கூறுகையில்,

கொரோனா வைரசின் தாக்கம் முற்றாக நீக்கப்பட முன் இவை நியமிக்கப்பட்டுள்ளதெனில் அதற்கு வெகுவான காரணங்கள் இருக்கவேண்டும். முதலாவது கிழக்கு மாகாணத்திற்கான செயலணியை எடுத்துக் கொள்வோம்.

அதில் பௌத்தர்கள் மட்டுமே இடம் பெறுவதாகத் தெரிகின்றது. பௌத்தபிக்குகள் பெருவாரியாக இடம்பெறுகின்றனர். இதன் அவசியம் என்னவென்று பார்க்கையில் கொரோனா வைரசைப் பாவித்து அண்மையில் எமது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த 3000 ஆண்டுகால தமிழர்களின் கிழக்கு மாகாண இருப்பைக் கொச்சைப்படுத்தும் செயலாக இருக்கக்கூடும் என்றே நினைக்கின்றேன்.

அதாவது கிழக்கு மாகாணத்தில் மக்களை ஒரேயினமாக மாற்றவைக்கும் ஒருசெயற்றிட்டம் பலவருடகாலமாக இருந்து வருகின்றது. இதனை ஆங்கிலத்தில் Process of Ethno Centric Homogenization என்று அழைப்பார்கள். காலக் கிரமத்திலே கிழக்குமாகாணத்தில் வாழும் மக்களைச் சிங்களம் பேசுபவர்களாக மாற்றுவதும் முடியுமெனில் பௌத்தர்களாக மாற்றுவதுமே இதன் குறிக்கோள். மேல்மாகாணத்தில் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையில் சென்ற நூற்றாண்டில் இது நடந்தேறியது.

புத்தளம் வரையில் வாழ்ந்தஅந்ததமிழ்ப் பேசும் மக்கள் தற்போது சிங்களவர்களாகப் பரிணாமம் பெற்றுள்ளார்கள். தம்மைச் சிங்களவர்கள் என்று கூறும் அம்மக்களிடம் நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட அவர்களின் காணி உறுதிகளைக் காட்டச் சொல்லுங்கள்.

அவையாவும் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருப்பன. வயதில் மூத்தரூபவ் அதாவது 85-95 வரையிலான வயது கொண்ட முதியவர்களுடன் பேச்சுக் கொடுத்தால் அவர்கள் தமிழிலேயே உங்களுடன் பேசுவார்கள்.

ஆகவே சிங்களமயமாக்கல் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையில் சென்ற நூற்றாண்டே நடைபெற்று விட்டது. இப்பொழுது தமிழ்ப் பேசும் கிழக்கு மாகாண மக்களை மாற்ற எத்தனிக்கின்றார்கள். சிங்கள மொழியைப் பரப்பி தமிழை மறக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை திடீர் என்று வருபவை அல்ல. நன்றாகத் திட்டம் போட்டு நடைபெறுபவை.

பேராசிரியர்.பத்மநாதன், வட, கிழக்கில் காணப்பட்ட பல சரித்திரச் சான்றுகளை, தொல்பொருட்களை ஒரு கலாசார அருங்காட்சியகம் திறந்து அதில் காட்சிப்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகத்தவர்க்கும் அவர்களை வழிநடத்தும் குழு அங்கத்தவர்களுக்கும் பலகாலத்திற்கு முன்னர் சிபார்சு செய்திருந்தார். நிதி உதவிகோரி இந்திய மத்திய அரசுக்குக்கூட தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அது எமது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பின்னர் கைவிடப்பட்டது. திருகோணமலையில் சேனையூரில் பெருந்தூண்களில் பௌத்தம் பற்றி தமிழில் எழுதப்பட்டுள்ளது. கல்முனையில் நாக சிற்பங்கள் காணப்படுகின்றன. பல்லவர்களுக்கு முன்னரே நாகராகிய தமிழர் சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்கியமைக்குச் சான்றுகள் உள்ளன.

நாவற்குடா கோயில்க் கட்டடத்தில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள் 2500 வருடங்களுக்கு முன்பானதென்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிநாகன் பள்ளி என்பது தமிழ் பௌத்தர்களால் நடாத்தப்பட்ட பௌத்த வழிபாட்டுத்தலம். தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்கள் எல்லாம் சிங்களவர் இருந்த இடங்கள் என்று நிரூபிக்க குறித்த செயலணி நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இப்பொழுது கூட அருங்காட்சியகம் கட்டுவதுபற்றி இந்தியஅரசாங்கத்துடன் நாம் பேசலாம். மேலும் நீங்கள் குறிப்பிட்ட செயலணியில் தமிழ் பேராசிரியர்களும் கிழக்குமாகாணத் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெறவேண்டிய அவசியத்தைநாம் செயலணிக்கு வலியுறுத்தலாம்.

இரண்டாவதாக அமைக்கப்பட்டுள்ள செயலணியானதுரூபவ் முழு ஏற்புடையதொன்று. படையினரையும் பொலிஸாரையும் உட்கொண்டதொன்றாகவுள்ளது. நாட்டில் ஒழுக்கமும் பாதுகாப்பும் ஏற்பட உருவாக்கப்பட்ட ஒருசெயலணி. அந்தச் செயலணியின் உருவாக்கம் நாட்டை சர்வாதிகாரம் நோக்கி நடத்திச் செல்லவும் ஒரு உபாயமாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. ஏனெனில்,

1. ஜனாதிபதி ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒருபோர் வீரர். ஆணைகளுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்று சிந்திப்பவர். தாமே அந்த ஆணையாளராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்.

2. அதனால் தான் அவர் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்த விழைகின்றார் என்று நினைக்கின்றேன்.

3. முக்கிய சிவில் பதவிகளுக்கு ஏற்கனவே அவர் முன்னைய படைவீரர்களை நியமித்துவிட்டார்.

இந்தச்செயலணி நியமிக்கப்பட்டவர்களை வழிநடத்த உதவும். கொரோனா வைரசைச் மையப்படுத்தி இந்தசெயலணியை அவசர அவசரமாக அவர் நியமித்துள்ளார்.

இலங்கைக்கெதிராக சர்வதேச நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடும் என்ற நிலையில் தம்மைப் பதவியில் நிலைக்கச் செய்ய இவ்வாறான நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார்.

சர்வாதிகாரமானது தமிழர்களை மிகவும் பாதிக்கும். அதைவிட தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் பறிபோகும் நிலை இனி ஏற்படும். சீனாவுடனான உறவுமிகவும் அன்னியோன்யமாகும்.

இந்தியாவிற்கு அவரின் சீன உறவைத்துண்டிக்க முடியாமல் போய்விடும்.

தமிழர்களின் உரிமைகளைப் பெற இந்தியாகளம் புகுந்தால்த்தான் இந்தியாவின் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படும். எமது நாட்டு அரசியல்வாதிகளின் உண்மைச் சொரூபம் அறிந்தவர் பாரதப்பிரதமர் மோடி என்பதே எனது கணிப்பு. இரண்டு செயலணிகளுமே எம்மக்களுக்குப் பாதிப்புக்களைக் கொண்டு வரப் போகின்றனஎன்றுநம்பலாம்.

புதிய இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கும் போது எமது தேசியக் கூட்டணியினர் இவை பற்றி அவருடன் கலந்துரையாடுவர் என்றார்

சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகையில்,

கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிப்பொறுப்பினை ஏற்றதன் பின்னராக, ஆளுநர், அமைச்சின் செயலாளர், விசேட செயலணிகளின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், சிவில் நிறுவனங்களின் அதிகாரிகள் என்று முப்படையின் அதிகாரிகளே தொடர்ச்சியாக நியமிக்கப்படுகின்றார்கள். நியமனங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

இத்தகையதொரு பின்னணியில் கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காக 11பேர் கொண்ட செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தசெயலணியின் மூலம், கிழக்கு மாகாணத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை முப்படையினரின் துணையுடன் முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பிரதேசத்தினை முழுமையாக அபகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, பாதுகாப்பான நாடொன்றை, ஒழுக்கநெறியுள்ள, குணநலன்கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியும் 13முப்படை அதிகாரிகள், பொலிஸார், முப்படையினரின் புலனாய்வு பிரிவினர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஒருபக்கத்தில் தேர்தலை நடத்துவதற்குரிய நகர்வுளைச் செய்துவரும் அரசாங்கம் மறுபக்கத்தில் இவ்வாறு செயலணிகளை நியமிப்பதன் ஊடாக தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகளுக்கு முடக்கத்தினை ஏற்படுத்தவதற்கு திட்டமிடுகின்றதா என்ற சந்தேகத்தினை ஏற்படுகின்றது.

அதுமட்டுமன்றி இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக திரைமறைவாகச் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் ஆகியவற்றை அச்சுறுத்தவும்ரூபவ் அடக்குவதற்கும் விளைகின்றதா?

தேர்தல்காலத்தில் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படுகின்றமையானது மறைமுகமாக ஜனநாயக செயற்பாடுகளை முடக்கி குரல்வளையை நசுக்குமொரு செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பானது தமிழ்த் தேசியப் பரப்பிலும் வடக்கு கிழக்கில் உள்ள அரசியல்ரூபவ் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எவ்வளவு தூரம் தாக்கத்தினை செலுத்துகின்றதோ அதேயவிற்கு தென்னிலங்கையிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பிரதமர், அமைச்சரவை ஆகியவற்றுக்கு கட்டுப்படாது ஜனாதிபதியின் நேரடியான உத்தரவுகளுக்கு மட்டுமே கட்டப்படுவதாக இந்த செயலணிகள் உள்ளன. இத்தகைய அதிகாரத்தினைக் கொண்ட செயலணியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அமைச்சரவையோ அங்கீகரிக்கின்றதா என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.

இத்தகைய போக்கானது நாட்டில் ஜனநாயக முறைமையிலான செயற்பாடுகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கப்பதோடு சர்வதிகாரம் படிப்படியாக வளர்ச்சியடந்து இராணுவ ஆட்சியொன்றை ஸ்தாபிப்பதை நோக்கிச் செல்லவதாகவே உள்ளது. ஆகவே வடக்கு கிழக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல ஜனநாயகத்தினை விரும்பும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த ஜனநாயக மறுதலிப்பு செயற்பாடுகளுக்காக ஒன்றிணைய அணிதிரள வேண்டும் என்றார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில்,

கொரேனா நெருக்கடிக்குள் இரண்டு செயலணிகள் அமைக்கப்பட்டிருப்பதை குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த செயலணிகள் மூலம் தமிழர் தேசத்தில் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் சக்திகளை நசுக்குவதற்கான ஒரு பாசிசவாதபோக்கின் வெளிப்பாடாகவே நோக்கவேண்டியுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டப்படுத்துவதென்ற பெயரில் தமிழர் தாயகத்தில் பொலிஸார் மற்றும் படையினர் எவ்வாறு சோதனைச் சாவடிகளையும் உண்மைக்குப்புறம்பான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அடிப்படை உரிமைகளை கூட மதிக்காது செயற்பட்டனர் என்பதனை அனைவரும் நன்கறிவார்கள்.

பாராளுமன்றத்தினை கூட்டாது, ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்று அதிகரத்தினை பயன்படுத்தி ஒருதலைப்பட்சமான தீர்மானங்களுடனான நிருவாகமொன்றே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்தச்சூழலில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகள் நிச்சமாக கிழக்கு மாகாணத்தினை முழுமையாக சிங்கள மயமாக்குவதோடுரூபவ்பௌத்த மதத்தின் பெயரால் கையகப்படுத்தும் நடவடிக்கைகளையே முன்னெடுக்கப்போகின்றது. தமிழர்களின் தேசத்தில் அவர்களின் இருப்பினை மாற்றுவதே பேரினவாத சக்திகளின் நிகழ்ச்சிநிரலாக இருக்கின்றது. இதற்கான சில நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விளையவுள்ளன.

இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது தமிழர்கள் தமது தேசத்தினையும் இருப்பினையும் பாதுகாப்பதற்காக போராட விளைகின்றபோது அல்லது எதிர்ப்புக்களை தெரிவிக்க விளைகின்றபோது அதனைக் கட்டப்படுத்துவதற்காகவே இரண்டாவது செயலணி அமைக்கப்பட்டுள்ளது. அச்செயலணியானது தேசிய பாதுகாப்பு என்றபெயரில் தமிழனத்தினை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் என்பது தெளிவாகின்றது.

ஆகவே நாட்டினை இராணுவ சர்வாதிகார நிருவாகத்தினுள் வைத்துக்கொண்டு தமிழினத்தின் இருப்பை அழித்தொழிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை தெளிவாகின்றது. இதில் தமிழ் பேசும் மற்றொரு சமுகமான முஸ்லிம்களும் நிச்சயமாக பாதிப்படையப்போகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒரு தேசத்தில் ஒருமொழிபேசும் சமூகமாக இருக்கும் முஸ்லிம்களும் இந்த விடயத்தில் விளித்துக்கொள்ள வேண்டும். அவர்களும் தமிழ் மக்களுடன் தமது இருப்பினையும் பர்துகாப்பதற்கான ஒன்றிணைய வேண்டும். இந்த சந்தர்ப்பத்தினை தவற விடுகின்றபோது இரு சமூகங்களினது இருப்புமே கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.