சிறிலங்காவில் கல்கிஸ்ஸ – சொய்சபுர துப்பாக்கிச்சூட்டின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை

287 0

சிறிலங்காவில் மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கல்கிஸ்ஸ – சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் மினுவாங்கொட பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12.03 மணியளவில் குறித்த நபரை கைது செய்ய சென்றபோது பொலிஸார் மீது சந்தேக நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட எதிர் தாக்குதலில் சந்தேகநபர் காயமடைந்து திவுலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திவுலபிட்டிய பல்லபான பகுதியை தற்காலிக வதிவிடமாகக் கொண்ட 50 வயதுடைய பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் களனிய குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.