சிறிலங்காவில் இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி வரும் நிலையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வழிப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளாந்த ஆராதனைகளை நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் அடையாளம் காணப்பட்ட நாள் முதல் வீட்டிலிருந்தே பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கிறிஸ்தவ மக்கள் வேண்டப்பட்டிருந்ததற்கு அமைய மக்கள் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, தற்போதைய நிலைக்கு அமைய வரையறுக்கப்பட்ட மக்கள் தொகையுடன் தினமும் கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனைகளை நடத்த அனுமதி வழங்குமாறு கொழும்பு பேராயர் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவியதையடுத்து, நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இறை வழிபாட்டுத் தலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.