கரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்

350 0

கரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வருகிற நிலையில் மக்களிடம் சமூக இடைவெளி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்கிடும் வகையிலும் தன்னார்வலர்கள் குழுவை பாகிஸ்தான் அரசு ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கரோனா நிவாரண படைத் தலைவர் உஸ்மான் தார் கூறும்போது, “ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவிடத் தன்னார்வலர்களுக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன் பெயரில் இதுவரை 10 லட்சம் தன்னார்வலர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். தற்போது 1.6 லட்சம் தன்னார்வலர்கள் கரோனா தடுப்புப் பணியில் அரசுக்கு உதவி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

உணவின்றித் தவித்து வரும் ஏழை மக்களுக்கு உணவைக் கொண்டு சேர்க்கும் பணிகளிலும், மருந்துப் பொருட்களைக் கொண்டுசேர்க்கும் பணிகளிலும் இந்தத் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், மக்களிடையே சமூக இடைவெளி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தத் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கரோனா இறப்பு எண்ணிக்கை 1,935 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,734 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்று எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 68,50,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,98,244 பேர் பலியாகி உள்ளனர். 33,51,249 பேர் குணமடைந்துள்ளனர்.