நான்கு ஆண்டுகளுக்கும் நான் ஆட்சியில் தொடர வேண்டியது அவசியம்: ட்ரம்ப்

359 0

கரோனா தாக்குதலிலிருந்தும் பொருளாதாரச் சரிவிலிலிருந்தும் அமெரிக்கா மீண்டுள்ளது. வேலைவாய்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் நான் ஆட்சியில் தொடர வேண்டியது அவசியம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

கரோனா தொற்று எண்ணிக்கையிலும், இறப்பு எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தொற்று எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது. கரோனா பரவல் தீவிரம் கொண்டிருந்த கடந்த மூன்று மாதங்களில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்தனர்.

அமெரிக்காவின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்நிலையில் தற்போது கரோனா தீவிரம் சற்று குறைந்துள்ள நிலையில் உலக நாடுகள் அதன் எல்லைகளைத் திறந்து வருகின்றன. பொருளாதாரச் செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா தாக்குதல், பொருளாதாரச் சரிவு என கடந்த மூன்று மாதங்களாக அமெரிக்கா கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிற நிலையில் அங்கு நிலவும் இனவெறிக்கு எதிராக தற்போது போராட்டங்கள் வெடித்துள்ளன. இது ட்ரம்ப் அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின நபர் அமெரிக்க போலீஸ் அதிகாரியால் உயிரிழந்தார். இதன் விளைவாக நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க பொருளாதாரம் குறித்தும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் குறித்தும் ட்ரம்ப் கூறும்போது, ”அமெரிக்காவின் சரிந்த பொருளாதாரம் இன்று மீண்டுள்ளது. வேலை வாய்ப்புகள் வேகமாக அதிகரித்துள்ளன. அமெரிக்க வரலாற்றில் இது சிறந்த சாதனை. நான் அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகள் இந்தப் பதவியில் தொடர வேண்டும். ஒருவேளை தவறான நபர்கள் அப்பதவிக்கு வராதபட்சத்தில் வளர்ச்சி மீண்டும் தொடரும்.

கடந்த வாரம் நடந்த நிகழ்வைக் கண்டிக்கிறேன். வேறு எந்த அதிபரும் கறுப்பின மக்களுக்கு என்னைப் போல் உதவவில்லை. நான் மேற்கொண்ட பொருளாதார மீளுருவாக்கம் சமூக உறவை மேம்படுத்தி சமத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திலும் அமெரிக்கா நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது. தற்போது ஜார்ஜ் ஃப்ளாய்ட் மேலே இருந்து நம்மைப் பார்த்து ‘நம் நாட்டில் சிறப்பான விஷயங்கள் நடந்து வருகின்றன. இது நிச்சயம் சமத்துவத்துக்கான நிகழ்வு என்று கூறுவார்” எனத் தெரிவித்தார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.