ஆஸ்பத்திரியில் ஸ்திரமான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டாக்டர்கள் சங்கம் எழுப்பி உள்ளது.
கொரோனா தொற்று பாதித்து ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுகிறவர்களை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி தரப்படுவது இல்லை. இதனால் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும் பார்க்காமலும், பேசாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் ஸ்திரமான உடல் நிலையில் உள்ள கொரோனா நோயாளிகள் செல்போன்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கலாம் என மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் அங்குள்ள டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதேபோன்று ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீள்வதற்காக அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துபோகிறபோது, அவர்களின் உடல்களைப் பார்ப்பதற்கு குடும்பத்தினருக்கு கூட அனுமதி தரப்படுவதில்லை. இது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள்படி, உள்ளாட்சி நிர்வாகத்தில் இருக்கிறவர்கள் இறுதிச்சடங்குகளை செய்து முடிக்கிறார்கள்.
இது இறந்து போகிறவர்களின் குடும்பத்தினருக்கு மன வேதனையை ஏற்படுத்தி விடுகிறது. வாழ்நாளெல்லாம் நினைத்து நினைத்து அவர்கள் மன நிம்மதி இழப்பதற்கும் வழிநடத்தி விடுகிறது. இந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் இறக்கிறபோது, முறையான நெறிமுறைகளை பின்பற்றியபின்னர், உடலைப்பார்ப்பதற்கு குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும்; இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அந்த மாநில டாக்டர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மணாஸ் கும்தா கடிதம் எழுதி உள்ளார்.
இதற்கு மத்தியில், இறந்தவர்களின் உடல்களை பார்ப்பதற்கு உறவினர்களை அனுமதிக்க மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.