யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தம்பு லோகநாதபிள்ளை தனது 85 ஆவது வயதில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.
யாழ் நாரந்தணையில் பிறந்த லோகநாதபிள்ளை தனது கல்வியை கரம்பன் சென் அன்றனிஸ் கல்லூரியில் பயின்று பின்னர் 1957ல் கொழும்பு வீரகேசரி பத்திரிகையில் தனது பணியை தொடங்கினார். பின்னர் கொழும்பு மாநகரசபையில் உத்தியோகத்தராக சேர்ந்தார். கொழும்பில் பணியாற்றிய போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தந்தை செல்வா மற்றும் தமிழ் தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற அகிம்சை போராட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டிருந்தார்.
1983ல் ஏற்பட்ட இன கலவரத்தினால் தனது வீடு ஏரிக்கப்பட் நிலையில் யாழ்பாணத்திற்கு இடம்பெயர்ந்து சென்று பின்னர் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் பெற்று அங்கு சிறிதுகாலம் பணியாற்றினார்.
ஓய்வுபெற்ற பின்னர் யாழ்ப்பாணம் முரசொலி பத்திரிகையில் சேர்ந்த அவர் இந்திய அமைதிகாக்கும் படை பத்திரிகை காரிலாயத்தை எரிக்கும் வரை தனது பணியை தொடர்ந்தார். அக்காலத்தில் ஈரோஸ் பாலகுமாருடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் 1989ல் நடைபெற்ற யாழ் மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருடன் சேர்த்து ஈரோஸ் சார்பில் வெற்றி பெற்ற 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறும், இந்திய -இராணுவத்தை உடனடியாக வெளியேற்றுமாறும் , தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக புறக்கணித்ததால் தமது பதவிகளை இழந்தனர்.
மீண்டும் 2000 ஆண்டில் யாழ் மாவட்ட தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தபோதிலும் அப்போது செயற்பட்ட துணை இராணுவ குழு ஒன்றினால் குடும்ப உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடியான அச்சுறுத்தல்கள் காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
முதுமை காரணமாக இயலாமை அடைந்திருந்தபோதிலும் தமிழ் தேசியத்துக்காக வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக அரசியல் பத்திகளை எழுதிவந்திருந்தார்.
1983 ஆம் ஆண்டு கொழும்பில் இன கலவரத்தின்போது தனது வீட்டை எரித்தமைக்காக பல ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் விசாரைணகளில் கலந்துகொண்டு சாட்சியங்கள் அளித்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் போராடி வந்திருந்தார்.
அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுகிழமை மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லமான Brilliant Institute, 136 Sangamitha Mawatha, Colombo13 அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெறும்