இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு

326 0

லடாக் எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது.

இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இரு தரப்பு ராணுத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவத்தினரும் படைகளை குவித்தன.

இதையடுத்து சிக்கலுக்கு தீர்வு காண கடந்த 2-ந் தேதி, மேஜர் ஜெனரல் அந்தஸ்துள்ள அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, லெப்டினன்ட் ஜெனரல் நிலையிலான அதிகாரிகளிடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் சீன பகுதியான மோல்டோ என்ற இடத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பதற்றத்தை தணிப்பதற்காக சில திட்டங்கள் முன்வைக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.

இந்தியா தரப்பில் 14- வது படைப்பிரிவு  கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங், சீனா தரப்பில் தெற்கு ஜின்சியாங் ராணுவ பிரிவு கமாண்டர் லின் லியூ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வான் பள்ளதாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவத்தை சேர்ந்தவர்கள் பின்வாங்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.    சீன படைகளின் பின்வாங்குதல் நடவடிக்கையை தொடர்ந்து லடாக் எல்லை பகுதியில் பதற்றம் படிப்படியாக தணியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.