விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ஒருபோதும் ரத்து செய்யாது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறிய தாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த மே மாதம் 31-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில் மோடி செய்த சாதனைகள், கொரோனா வைரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன ஆகியவற்றினை ஒரு கையேடாக தயாரித்து அதனுடன் மோடி எழுதிய கடிதத்தினை இணைத்து நாடு முழுவதும் 10 கோடி பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.
ஓராண்டில் நீண்ட காலம் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததுடன், காஷ்மீர், லடாக் பகுதிகளை முழுமையாக இந்தியாவுடன் மோடி இணைத்திருக்கிறார். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான முத்தலாக் முறையை ஒழித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் 24-ந்தேதி கொரோனா வைரசை தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் 80 கோடி குடும்ப அட்டைகளுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை முழு மானியத்துடன் மத்திய அரசு வழங்கியுள்ளது. மோடியின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு மட்டும் ஒரு கோடி பேருக்கு பலன் கிடைத்திருக்கிறது
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்து விடுவார்கள் என்று பிரசாரம் செய்தார். ஆனால் மோடி அந்த திட்டத்திற்காக ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு ரூ.100 கூலி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை ரூ.182 ஆக உயர்த்தியுள்ளார். தற்போது மேலும் ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுய சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் கடந்த 60 நாட்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ரேபிட் கிட்ஸ் உற்பத்தி இந்திய தொழிற்சாலைகளில் தொடங்கப்பட்டு உள்ளது. அதேப்போல் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா சாவு 4.5 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் 2.6 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 25 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் 48. 6 சதவீதமாக உள்ளது. மோடி தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் இது சாத்தியமாகியுள்ளது.
மின்சார திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மின்சார மானியத்தை ஒரு போதும் ரத்து செய்யாது. காட்மென் வெப் சீரியல் சிறுவர்களை சீரழிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இதை கருத்துரிமை என்று பேசுபவர் களை சமூக விரோதிகள் என்றுதான் சொல்வேன்.
மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என்று பேசிய ஜோதிமணி எம்.பி., தமிழன் பிரசன்னாவை கைது செய்ய பா.ஜ.க. போராட்டம் நடத்தியிருக்கும். ஊர டங்கு காரணமாக அதனை செய்யவில்லை. தமிழக அரசு 2 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கோட்ட பொறுப்பாளர் சிவ சுப்பிரமணியம், இல.கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.