வெட்டுக்கிளி தாக்கம் குறித்து விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை- சிவகுமார்

280 0

பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் வடக்கு மாகாண விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லையென வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் ள.சிவகுமார் தெரிவித்துள்ளார்

பாலைவன வெட்டுக்கிளி தாக்கம்  குறித்து இன்று (சனிக்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக சிவகுமார் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாலைவன வெட்டுக்கிளிகள் என்பது உண்மையில் கூடியளவு சேதத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு வெட்டுக்கிளி இனமாகும்.

அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம எனுமிடத்தில் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டன. இதை நாங்கள் எமது விவசாயத் திணைக்களம் மத்திய விவசாயத் திணைக்களத்தினூடாக பரிசோதித்தோம். இது ஒரு மஞ்சள் புள்ளிகள் கொண்ட ஒருவகை வெட்டுக்கிளி என அறிவித்திருந்தார்கள் இது வழமையாக இலங்கையில் உள்ள ஒரு வகை வெட்டுக்கிளி இனமாகும் பாலைவன வெட்டுக்கிளியல்ல

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளால் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனினும் அதனை கட்டுப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலேயே காணப்படுகின்றது . தற்போது இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் நாங்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக பாலைவன வெட்டுக்கிளிகள் வடக்கு மாகாணத்தில் இதுவரை இனங்காணப்படவில்லை. அதாவது யாழ்ப்பாண மாவட்டத்தில் குப்பிளான் பகுதியில் ஒரு ஆலயத்திற்கு பின்னால் உள்ள ஒரு செடியில் பத்து, பதினைந்து வெட்டுக்கிளிகள் இனங்காணப்பட்டது. எனவே இந்த விடயம் தொடர்பில் அங்குள்ளவர்கள் உடனடியாக விவசாய திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு நாம் விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டபோது அது இலங்கையிலுள்ள ஒரு வகை வெட்டுக்கிளிதான்

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. பத்திரிகைகள் மூலம் பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் பற்றி கேள்விப்பட்டு, அச்சத்தின் காரணமாக விவசாயிகள் எமக்கு தெரியப்படுத்தினார்கள்.  வவுனியா மாவட்டத்திலும்  இனங்காணப்பட்டன. எனவே அவை அனைத்தும் இலங்கையில் உள்ள சாதாரண வெட்டுக்கிளிகள் தான் அவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல.

மேலும் விவசாயிகளின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் எமக்கு அவசியமானது. இலங்கையில் அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக தற்போதைய நிலையில் பாலைவன வெட்டுக்கிளியின் பாதிப்பு என்பது இல்லை என்பதுதான் உண்மை.

மேலும் வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் பிரதி விவசாயப் பணிப்பாளர்களின் அலுவலங்களின் தொலைபேசி இலக்கங்களை நாங்கள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். அதேபோல் மத்திய விவசாயத் திணைக்களத்தின் 1920என்ற தொலைபேசி இலக்கத்தையும் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளோம். எனவே விவசாயிகள் தாங்கள் சந்தேகப்படுமிடத்து தகவலினை தெரியப்படுத்தும் இடத்து அவை தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.