சிறுநீரகப் பிரச்சனை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலகத்தில் இதனை மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது. வன்னியில் தமிழ் மொழி பேசும் மக்களே அதிகமாகவுள்ள நிலையில் இவ் இணைப்பு அலுவலகத்தின் பெயர் பலகை தனிச் சிங்களத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்பாடு குறித்த கருத்து தெரிவித்த பொதுமக்கள் தனிச்சிங்களத்தில் பெயர்ப்பலகை அமைந்துள்ளதால், தமிழ் மக்களுக்கு அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என தெரியாத நிலையில் பயன்பெற முடியாத நிலைமை காணப்படுவதாகவும், இரண்டு மொழிகளிலும் பெயர்ப்பலகை வைக்கும்போது மக்கள் இலகுவாக பயன்பெற முடியும் என குறிப்பிட்டனர்.இந்நிகழ்வில் வவுனியா அரச அதிபர் எம்.பி. ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரச அதிபர் திரேஸ் குமார், கிராம அலுவலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.