கோதபாயவின் ராணுவ ஆட்சிக்கு அரண் அமைக்கும் செயலணிகள்!

360 0

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணவென அமைக்கப்பட்டுள்ள செயலணி, தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி அனைத்து வலையமைப்புகளையும் உள்வாங்க உருவாக்கப்பட்டுள்ள செயலணி என்பவற்றில் படைத்துறையினரையும், சிங்கள பௌத்தர்களையும் மட்டும் இடம்பெறச் செய்வதன் பின்னணி என்ன? எஞ்சியுள்ள தமிழர் நிலங்களை சூறையாடுவதும், தமிழர் உரிமைக்குரலை நசுக்குவதும்தான் காரணம் என்பதை தமிழர் தலைமைகள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றன?

இலங்கை அரசாட்சியில் எங்கும் எதிலும் ராணுவம் என்ற நிலை மேலோங்கி வருகிறது. எதற்கெடுத்தாலும் ராணுவத்தினரையே நியமனம் செய்கின்ற புதிய ஒழுங்குமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

சரியாக நான்கு மாதங்களுக்கு முன்னரும், அதற்கு ஒரு மாதத்துக்கு பின்னரும் இப்பத்தியில் என்னால் இடப்பட்ட சில தலைப்புகள் இப்போது நினைவுக்கு வருகின்றன.

கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியில் எழுதிய பத்திக்கு ஷஉறவுகளும் நட்புகளும் கூட்டிணைந்த ராணுவ நல்லாட்சி| என்று தலைப்பிட்டிருந்தேன். கடந்த பெப்ரவரி முதல் வாரத்தில் எழுதிய பத்திக்கு ஷசிங்களம் சரணம் கச்சாமி – சர்வமும் ராணுவம் கச்சாமி| என்று தலைப்பிட்டிருந்தேன்.

அவ்வேளையில் இவைகளை மறுக்கும் பாங்கில் கோதபாய ராஜபக்ச, இலங்கையில் ராணுவ ஆட்சி கிடையாது, அந்த எண்ணமே இல்லை என்றவாறு கூறிவந்தார்.

ஆனால், இலங்கையின் நிர்வாக அலகு படிப்படியாக ராணுவ மயமாக்கப்பட்டதை அப்போது அவதானிக்க முடிந்தது. இலங்கையை எப்போதாவது சோசலிச ராணுவ குடியரசாக மாற்றிவிடக்கூடுமென அப்பத்திகளில் சுட்டியிருந்தேன்.

இப்போது இடம்பெறும் அத்தனை சம்பவங்களும் அச்சொட்டாக அதனை நோக்கியே நகர்த்தப்படுகிறது.

பிரதமர் பதவி வகிக்கும் மகிந்த ராஜபக்ச அரசியல் பாதையில் தமிழரின் உரிமைகளை பறித்தெடுக்கும் செயற்பாடுகளை தமது அறிக்கைகள் வாயிலாக செயற்படுத்தி வருகிறார்.

ஜனாதிபதி பதவி வகிக்கும் கோதபாய ராஜபக்ச இலங்கை என்பது சிங்கள பௌத்த ராணுவ ராஜ்யம் என்பதை குறிக்கும் என்றவாறு தமது எண்ணப்பாடுகளை நகர்த்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரை சந்தித்து பேசிய பின்னர் வெளிவரும் செய்திகளையும் அறிக்கைகளையும் ஊன்றிக் கவனித்தால் சில உண்மைகள் தெரியவரும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உட்பட தமிழரின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தை தமக்கு நம்பிக்கை அளிப்பதாகவும், தொடர்ந்து அவருடன் பேச்சுவார்த்தை இடம்பெறுமென்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இவரது நம்பிக்கை என்ற சொற்பதம் எப்பவுமே சம்பந்தா சம்பந்தமில்லாது அர்த்தமற்றதாக இருப்பதை நல்லாட்சிக் காலத்தில் இவர் தெரிவித்த நம்பிக்கைகளினூடாக பார்க்க முடிந்தது.

இப்போது அந்த நம்பிக்கை மகிந்த பக்கம் சென்றுவிட்டது. ஆனால், மகிந்த தரப்பிலிருந்து அந்த நம்பிக்கை எதுவும் காணப்படவில்லை – காட்டப்படவும் இல்லை. மாறாக, கூட்டமைப்பினர் மீது வழக்கமாக விதிக்கும் நிபந்தனைகளையே அவரிடமிருந்து காணமுடிகிறது.

‘வடக்கு கிழக்கு பகுதிகளை தனிநாடாக்க வேண்டுமென்ற சிந்தனை இந்த நாட்டில் தமிழ் அரசியலில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்துகிறது. இது நடைமுறைச் சாத்தியமற்றது. இதனைப் புரிந்து அதற்கேற்றாற்போல அவர்கள் தங்களைச் சரிசெய்து கொள்ள வேண்டும்” என்று இந்தியாவின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மகிந்த சற்று அழுத்திக் கூறியிருந்தார்.

பிரதமர் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக சம்பந்தன் தெரிவித்த பின்னரே இந்தச் செவ்வியை பிரதமர் வழங்கினார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தக் கருத்தை கூட்டமைப்பு எந்தளவில் உள்வாங்கியதோ தெரியவில்லை.

தனிநாட்டுக் கோரிக்கையை தாங்கள் கைவிட்டு விட்டதாகவும், பிளவுபடாத ஒரே நாட்டுக்குள் தாங்கள் தீர்வுபெற விரும்புவதாகவும் கூட்டமைப்பினர் மீண்டும் மீண்டும் கூறிய பின்னரும், தனிநாடு என்ற பதத்தை மகிந்த பயன்படுத்துவது விசமத்தனமானது.

மகிந்த அத்துடன் நிறுத்தவில்லை. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கோரிக்கையையும்கூட தனிநாடுதான் என்று கூறியிருக்கும் இவர் கருத்து, தமிழர்கள் தங்கள் தாயக கோட்பாட்டையும் அறவே கைவிட வேண்டுமென்னும் சிங்கள பௌத்த மேலாண்மைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

1977 தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் வாக்குரிமை வழியாக வழங்கிய தனிநாட்டுக் கோரிக்கையை 2009க்குப் பின்னர் தாங்கள் கைவிட்டு விட்டதாக கூறிவரும் கூட்டமைப்பு, இப்போது வடக்கு – கிழக்கு இணைப்பைக்கூட கேட்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதென்றால், அதற்கான பொறுப்பு அவர்களையே சாரும்.

இனி, கோதபாய ராஜபக்சவின் ராணுவ ரீதியான செயற்பாடுகளைப் பார்க்கலாம். முப்பதுக்கும் அதிகமான சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு படைத்துறையினர் – கூடுதலானோர் ராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னைய சிங்கள ஆட்சிக்காலங்களில் ஓய்வுபெற்ற தங்களுக்கு விசுவாசமான படைத்துறையினரை அனேகமாக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றவே நியமிப்பது வழக்கம். தற்போதைய ஆட்சியில் உள்நாட்டில் பல்வேறு தலைமைப் பதவிகளுக்கும் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இனிவரும் காலங்களில் மேலும் பல படைத்துறை அதிகாரிகள் பல்வேறு உயர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவரென மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்ததை நினைவு கொள்வது அவசியம்.

மிருசுவில் படுகொலைகள் தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு விடுதலை அளிக்கப்பட்டதை நியாயப்படுத்தி கோதபாய கருத்து வெளியிட்டுள்ளார்.

‘ராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றங்கள் சுமத்த நான் இடமளிக்க மாட்டேன். அரசியல் அமைப்பு ரீதியாக எனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்தேன்” என்னும் இவரது கூற்று, தொடர்ந்து ராணுவத்தினர் தமிழரைப் படுகொலை செய்யலாமென்பதற்கு வழங்கப்பட்டுள்ள முற்கூட்டிய அனுமதியாகவே பார்க்கப்பட வேண்டியது.

வழக்கு விசாரணை ஏதுமின்றி, குற்றம் எதுவும் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்ட 14,500 விடுதலைப் புலிகள் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டதை, மரணதண்டனை பெற்ற சுனில் ரத்நாயக்கவுடன் ஒப்பீடு செய்கின்ற ஒரு ஜனாதிபதியின் ஆட்சியில், சிங்கள ராணுவம் எத்தகைய உயர் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதென்பதை அறிய முடிகிறது.

இதற்கு உதாரணமாக, தமிழ் மக்கள்மீது போர்க்குற்றம் புரிந்த நாளை போர் வெற்றி நாளென்று அறைகூவி ராணுவத்தில் பெருமளவானோருக்கு உயர்பதவி வழங்கப்பட்டதை நோக்கலாம்.

முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை ஒரு கணிப்பு மாத்திரமே என்று தெரிவித்திருக்கும் கோதபாய, இந்தக் கொலைகளின் சூத்திரதாரிகளை மேன்மைப்படுத்தி பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்களில் சிலரின் பெயர்கள், அப்பாவித் தமிழர்களின் சித்திரவதையுடன் சம்பந்தப்பட்ட சர்வதேச விசாரணைகளில் இடம்பெற்றிருப்பதை அனைத்துலக மனித உரிமையாளர் ஜஸ்டின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார். யார் என்ன சொன்னாலும் அதற்கு செவி மடுக்க விரும்பாத கோதபாய அரசு அதற்கு எதிர்மாறாக ராணுவ முன்னெடுப்புகளை வேகப்படுத்தி வருகிறது.

தேசிய பொலிஸ் அக்கடமி, பல்துறை அபிவிருத்திச் செயலணி, படைத்துறையினருக்கு ஐம்பதினாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் உட்பட ஆறு முக்கியமான உட்கட்டமைப்புகளை வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தமது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கோதபாய கொண்டு வந்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணவும் பாதுகாக்கவும் என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய நிலங்களை அபகரிக்கவென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி கமல் குணரட்ன தலைமையில் தனியான செயலணியொன்றை கோதபாய சில நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்தார்.

காணி ஆணையாளர், பிரதம நில அளவையாளர் உட்பட பதினொரு தனிச் சிங்களவர் இச்செயலணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் இருவர் பௌத்த பிக்குகள். வடக்கு கிழக்கு மாகாணத்தின் பிரதம மதகுரு என்ற புதிய பதவிப் பெயரில் திலகவன்ச தேரர் என்பவர் இக்குழுவில் இடம்பெற்றிருப்பது விநோதமாகவுள்ளது.

பல்லின கிழக்கு மாகாணத்தை சிங்கள பௌத்த வாழ்விடமாக மீட்டெடுப்பது சிங்கள பௌத்த தேசியவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியென்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜகத் வீரசிங்க கூறியிருப்பதாக நியூஸ் ஏசியா பத்திரிகை குறிப்பிட்டிருப்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

முக்கியமாக, தமிழர் தாயகமான திருமலையை பல வருடங்களாக பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு இவ்விடயத்தில் பாரிய பொறுப்புண்டு. அதனை மறந்து மகிந்தவுக்கு வாழ்த்துக் கூறுவதும், பாராட்டுத் தெரிவிப்பதும், இந்த அரசில் நம்பிக்கை உண்டென்று நற்சான்றிதழ் வழங்குவதும் தேவையற்ற செயற்பாடுகள்.

இறுதியாக, இந்த வாரம் கோதபாய நியமித்த இன்னொரு செயலணி முக்கியத்துவம் பெறுகிறது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து வலையமைப்புகளும் இச்செயலணியினால் புதுப்பிக்கப்படுமென கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

முப்படைகளிலும் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், பொலிஸ் படையின் அதிகாரிகளை உள்ளடக்கியதான இந்தச் செயலணி நாட்டில் முழுமையான ராணுவ ஆட்சியை நிலைப்படுத்துவதற்கான கட்டமைப்பு என்று பலராலும் சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் தேர்தலில் ஆளும் தரப்புக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமானால், இப்போதைய முன்னெடுப்புகள்; கோதபாய விரும்பும் ராணுவ ஆட்சிக்கு வாய்ப்பாக அமையும்.

வீட்டைக் கட்டும் முன்னர் மதில் அமைப்பதும், கோட்டையைக் கட்டும் முன்னர் அரண் அமைப்பதும் வழக்கம். அதேபாணியில், தமது ராணுவ ஆட்சிக்கான அரண்களாக ஜனாதிபதி செயலணிகளை அடுத்தடுத்து உருவாக்கி வருகிறார் கோதபாய. இதனைத் தெரிந்தும் தெரியாததுபோல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தமிழ் தலைமைகள் கண்களை மூடிக்கொண்டிருக்கப் போகின்றன?

பனங்காட்டான்