இலங்கைத்தீவின் பூர்வீக குடிகளான தமிழர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் காலங்காலமாக சிங்களப்பேரினவாதம் நசுக்கியே வந்தது என்பதை வரலாறு எமக்குச் சுட்டிநிற்கிறது. இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை முதன்முதலில் பற்றிக்கொண்ட டி. எஸ். சேனநாயக்க தொடங்கி எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்க ஜே.ஆர் ஜெயவர்த்தனா சிறீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க வழியில் இன்று ஆட்சிபீடம் ஏறியுள்ள இராஐபட்சே குடும்பம் வரை தமிழினத்தை அழித்தொழிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
தமிழர்கள் இலங்கைத்தீவின் பூர்வீககுடிகள் என்பதை தொல்லியல் ஆய்வுகள் புலப்படுத்தியுள்ள நிலையில் அவற்றை மறுதலித்து தமிழர்கள் இலங்கைத்தீவின் வந்தேறு குடிகள் என்றும் இலங்கையில் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் இந்த பேரினவாத ஆட்சியாளர்கள் தம் மக்களிடம் உருவேற்றிவருகிறார்கள்.
கல்வி. பொருளாதார, அரசியல் என அடிப்படை உரிமைகளை அவாவிநின்ற தமிழ்மக்கள்மீது சிங்களப்பேரினவாத ஆட்சிபீடம், ஆயுதமுனையில் வன்முறையை ஏவி அடக்கிவந்தது. சிங்கள ஆட்சிபீடம் கொண்டுவந்த ‘தரப்படுத்தல்;’ என்கின்ற சட்டம் தமிழர்களை குறிப்பாக தமிழ் இளையோரை வெகுண்டெழச் செய்தது. படித்துவிட்டு, அரசில் தொழில் பெற்றுக்காள்ள முடியாத விரக்தியும், எதிர்காலம் குறித்த கேள்விக்குறியையும், அரசியலில் ஏமாற்றங்களையும் சுமந்துதிரிந்த இளைஞர்கள் ஆட்சியாளர்களுக்கதிராக எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள்.
இளையசமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டிய அரசபீடமோ, இளைஞர்களை வன்முறையாளர்களாக எதிர்கொண்டு, அவர்களை அச்சுறுத்தி அடக்க முயன்றது. அதன்விளைவாக தமிழ் இளைஞர்கள் இன்னுமின்னும் கொதிப்படைந்தார்கள். அரசு இந்த இளைஞர்கள்மீது காவற்றுறையை ஏவிற்று.
காவற்றுறையினரின் இனவெறியாட்டத்தில் தமிழ்மக்களின் குருதி இலங்கைத்தீவின் தெருக்களெங்கும் பெருகியது. இதனைக் கண்டு கொதித்து, தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் இவர்களுக்கெதிராக தனியொருவனாக போராடியவர் தான் தியாகி பொன்.சிவகுமாரன்.
விவசாயத் தொழிலும் செம்புழுதிமண்ணும் நிறைந்த அழகான உரும்பிராய்க் கிராமத்தில் பொன்னுத்துரை, அன்னலட்சுமி என்போரின் பிள்ளையாகப் பிறப்பெடுத்த சிவகுமாரன், தன் தாயாரிடம் இருந்துதான் தமிழ்த்தேச உணர்வைப் பெற்றுக்கொண்டார். இவரது தாயார் அன்னலட்சுமி அவர்கள் அன்றைய தமிழரசுக்கட்சியின் பற்றாளராக இருந்து அறவழிப்போராட்டங்களில் பங்கேற்றுப் போராடிய சிறப்புக்குரியவர்.
இந்த ஆட்சியாளர்களின் கூலிகளான காவல்துறையினர் தனது இனத்தவர்கள்மீது உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தல்களை மேற்கொள்வதை பார்த்த சிவகுமாரன் அவர்கள் மீது பதில்தாக்குதல்களைச் செய்யத் தொடங்கினார். தன்னந்தனியனாக நின்று சிங்களப்பேரினவாத கூலிகளான காவற்றுறையினர்மீதும் அவர்தம் அடிவருடிகள் மீதும் தாக்குதல்களை நடத்தினானார் சிவகுமாரன்.
அப்போது ஆட்சியிலிருந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியை ஆதரித்துக்கொண்டு, தமிழினத்திற்கு இன்னல் விளைவிக்க காரணமாக இருந்து செயற்பட்ட யாழ்ப்பாண நகரமேயர் அல்பிரட் துரையப்பா. இவரது சதிச்செயலின் விளைவாகவே 1974இல் யாழ் தமிழாராய்ச்சி மகாநாட்டின் இறுதிநாளில் பார்வையாளர்களாகச் சென்றிருந்த 9 தமிழர்களின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டன. எனவே தான் துரையப்பாவைக் களையெடுக்க வேண்டும் என சிவகுமாரன் நினைத்தார். அந்த நினைப்பை நிறைவேற்ற முயற்சித்தபோது, அத்தாக்குதலில் யாழ்நகர மேயர் உயிர்பிழைத்துக்கொண்டார்.
ஆனால் காலம் ஒரு கரிகாலனை உருவாக்கியது. அவரது ஆரம்பநாட்களில் அல்பிரட் துரையப்பாவிற்கான தண்டனை வழங்கப்பட்டு, சிவகுமாரனின் கனவு நிறைவேறியது என்பது வரலாறு.
மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்போம் என்றும், மக்களின் வாழ்வியலை முன்னேற்றும் அபிவிருத்திப் பணிகளைச் செய்வோம் என்றும் இன்னும் ஏதேதோ வாக்குறுதிகளை வழங்கி, பாராளுமன்ற உறுப்பினர்களாகிய அரசியல்தலைவர்கள் வெற்றியடைந்ததும் மக்களை ஏமாற்றத் தொடங்கினர். அரசியல் கூட்டங்களில் இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்விகளைக் கேட்டு அவர்களின் வேடங்களை மக்கள்முன் தோலுரித்தார் சிவகுமாரன்.
பாராளுமன்ற அரசியல் என்பது ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க உதவாது என்பதை சிவகுமாரன் நன்றாகவே உணர்ந்துகொண்டார். எனவேதான் அவலத்தை தருபவர்களுக்கு அதையே திருப்பிக் கொடுப்பதனூடாக, தமிழர்களின் உரிமைகளுக்கு ஓர் தொடக்கப்புள்ளியிட சிவகுமாரனால் முடிந்தது.
மேஐர் அல்பிரட் துரையப்பாவின் மீதான தாக்குதல் வழக்கில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டார். கொடுஞ்சிறை சிவகுமாரனை வதைத்தெடுத்தது. அந்தக் கொடுஞ்சிறைக்குள்ளும் அநீதிகளுக்கு எதிராகப் போராடினார் சிவகுமாரன். ஒருமுறை சிறையில் புத்தர்சிலைக்கு முன்னால் அமர்ந்திருந்து உணவொறுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிவகுமாரனை தலையில் தாக்கிய சிறைக்காவலர்கள், அவனது தலையிலிருந்து பெருகிய குருதியை புத்தர்சிலைக்கு காணிக்கையாக்கிய கதைகளும் உள்ளன.
சிறையின் கொடூரங்களை அனுபவித்த சிவகுமாரன், தன்னுயிர்காக்க வேறிடங்களுக்கு தப்பி ஓடவில்லை. தன்னால் இயன்றளவுக்கு மறைந்திருந்து கொண்டு செயற்பட்டார். தன்மானத் தமிழனாய் தன்னினத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழ்மக்களுக்கு அச்சுறுத்தலாகவிருந்த காவல்துறையினரை அழித்தொழிக்கவும் உறுதியேற்றார்.
அவரோடிருந்த சிலர் உயிருக்கு அஞ்சினார்கள். அவரிடமிருந்து விலகினார்கள். போராடுவதைக் கைவிட்டுவிடும்படி அறிவுரை சொன்னார்கள். ஆனால், அவர் தன் இலட்சியத்தில் உறுதியோடிருந்தார். சிவகுமாரன் தனித்தே இயங்கிக்கொண்டிருந்தார் அவர். அவரால் தன்னுடைய விடுதலை உணர்வுகளை வெளிப்படுத்தாதிருக்க இயலவில்லை. எனவே தான், யாழ்ப்பாணம் நல்லூரில் சிங்களபேரினவாத காவல்துறையினர்மீது மீண்டும் தாக்குதல் தொடுத்தார்.
இதனால், சிங்கள அரசு கடுஞ் சினமுற்றது. சிறீலங்காவின் காவற்றுறை சிவகுமாரனை இலக்குவைத்தது. இன்னொருமுறை தான் உயிரோடு பிடிபட்டால், தப்பிக்க முடியாது எனப் புரிந்துகொண்ட சிவகுமாரன் தலைமறைவாகினார். ஆனால், தமிழர்களின் வரலாற்றில் கூடவே பிறப்பெடுத்துநிற்கும் இனவிரோத எண்ணங்கொண்டவர்கள் அவரை விட்டுவைக்கவில்லை. சிவகுமாரன் தமிழினத்தின் களைகளான அக்கயவர்களில் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
சிவகுமாரன் சுற்றிவளைக்கப்பட்டார். அக்கணத்தில் எதிரியிடம் உயிரோடு பிடிபடக்கூடாது என்கின்ற எண்ணந்தான் அவரிடம் உருவாகியது. அதனால் தன்னோடு எப்போதும் கொண்டுதிரிந்த நஞ்சை அருந்திய நிலையில் கைதுசெய்யப்பட்ட அவரை எப்படியாவது காப்பாற்றி, அவரை வதைத்தே கொல்லவேண்டும் என அரசகூலிகள் முயற்சித்தன. தன்மான வீரராக, உயிரைவிடவும் மானம்பெரிதென உணர்த்தி வீரமரணத்தைப் பெற்றுக்கொண்டார் அத்தியாகி.
சிவகுமாரன் எதிர்பார்த்து வாழ்ந்த தமிழர் உரிமைகளையும் தமிழர் தாய்மண்ணையும் மீட்டெடுக்கவே, தமிழீழ விடுதலைப்போராட்டம் எங்கள் தேசத்தலைவர் மாண்புமிகு. தேசியத்தலைவர். வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் பேரெழுச்சியுற்று, ஈழத்தமிழினத்தை உலகிற்கு அடையாளப்படுத்தியது.
சிவகுமாரனின் வாழ்க்கை வரலாறு என்பது வெறுமனே கதையல்ல. ஈழத்தமிழ் இளையோர்கள் தம்வாழ்வில் படித்துணரவேண்டிய கட்டாய பாடம். எமது இளையதலைமுறையின் இருப்பிற்கு அடித்தளமிட்ட புரட்சிவீரன் சிவகுமாரன்.
சிவகுமாரனைப் பெருந்தியாகியாக உருவாக்கிய இரும்புமனுசி அவரது தாயார் அன்னலட்சுமி அவர்களே. இன்றைய தாய்மார்கள் தமகுழந்தைகளிடம் இவ்வரலாற்றை எடுத்துச் செல்லவேண்டும். இன்றைய இளையோர் சிவகுமாரனையும் அவர்போன்றே தேசத்துக்காக தம்மை அர்ப்பணித்த வீரர்களையும் தம் நெஞ்சிற் பதித்துக்கொள்ளவேண்டும். எனவேதான் சிவகுமாரனின் நினைவாக தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமையால் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் முன்மொழியப்பட்டு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
எமது தாயக விடுதலைப்போராட்டத்தை வென்றுவிட்டதாக மார்தட்டிக்கொண்டு, மீண்டும் ஆட்சிபீடமேறி இன்னமும் தமிழினத்தை அழித்தொழிக்கவேண்டும் என கனவு கண்டுகொண்டிருக்கின்றது சிங்களப் பேரினவாதம்.
இந்தசி சூழ்நிலையில் தியாகி. பொன். சிவகுமாரனதும் தாய்நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அனைவரதும் வரலாற்றை நினைவுகூர்ந்து, எம் இளையோர்நடுவே இவ்வரலாறுகள் முன்மொழியப்படவேண்டும்.
இன்றைய நாள் தமிழீழமாணவர்களின் எழுச்சியினை அடையாளப்படுத்தும் நாள். தமிழின இளையோரின் கற்றல் உரிமைகள் நசுக்கப்ட்டதையும், நசுக்கப்பட்டு வருவதையும் புரிந்துகொண்டு, புலம்பெயர்தேசத்து தமிழ்மாணவர்கள் தமது அறிவை உச்சமடையச் செய்யும் அதேவேளை, தாயகமாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அக்கறைகொள்ளவேண்டும் என அவாவிநிற்கின்றோம். தமிழன் எனச்சொல்லி தலைநிமிர்ந்து வாழ்ந்து எம்தேசம் காப்போம்.