ஞானசார தேரர் வரலாற்று அறிவின்றி கருத்து வெளியிடுவதை நிறுத்தவேண்டும் – ரவிகரன்

298 0

பொதுபலசேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவில்லாது கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரவித்துள்ளார்.

அத்தோடு வடகிழக்கு தாயகப் பரப்பில் இராணுவம் நிலைகெண்டிருப்பதை எப்போதும் தாம் ஏற்றுககொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

வட,கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல இலங்கை முழுவதும் பௌத்த பூமியாகும். வடகிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை ஞானசாரதேரர் தெரிவித்திருந்தார்.

ஞானசார தேரரின் குறித்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் ரவிகரனிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரவிக்கையில்

குறிப்பாக இலங்கைக்குப் பௌத்தம் வருவதற்கு முன்னரே, இலங்கை முழுவதும் சைவம் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல, இலங்கை முழுவதுமே தமிழர்களின் பூர்வீகத் தாயகமாகும்.

தமிழர்கள் வடக்கு, கிழக்கை மாத்திரமே தமது பூர்வீகத் தாயகமாக உரிமைகோருவதென்பது தமிழர்களின் பெருந்தன்மையாகும். இதனை உரியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சிங்கள மொழி இங்கு பிறப்பதற்கு முன்னரே தமிழ்மொழி பிறந்துவிட்டது. பன்நெடுங் காலமாக தமிழ் மொழி பேசப்பட்டும் வந்திரு்கின்றது.

சிங்களவர்கள் இங்கு ஒரு இனமாக கட்டமைப்பதற்கு முன்னரே, ஏன்? சிங்களவர்களின் மூதாதையர்கள் இந்தத் தீவிற்கு வருவதற்கு முன்னரே, இங்கு தமிழர்கள் நெடுங்காலமாக வாழ்ந்துவருகின்றாரகள் என்பது வரலாற்று ரீதியாக அறியக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் அவர் வடகிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது தொடர்பிலும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். வடக்குக்கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் படையினர் நிலைகொண்டிருப்பதை எப்போதுமே நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் சரியான வரலாற்று அறிவில்லாமல் கருத்துக்களை வெளிவிடுவதனை ஞானசாரதேரர் நிறுத்திக்கொள்ளவேண்டும். அவ்வாறு நிறுத்திக்கொள்வது நன்றாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்வாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.