உயிர்த்த ஞாயிற்று தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதி தாக்குதல் நடத்தப்பட்ட நாளுக்கு முதல் நாள் இரவு மட்டக்களப்புக்கு பயணிகள் பேருந்திலேயே குண்டை மட்டக்களப்புக்கு எடுத்துச் சென்றான் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (04) சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
சீயோன் தேவாலயத்தின் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நேற்று இடம்பெற்ற போது இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படாத சி.சி.டி.வி காட்சிகளை ஜனாதிபதி ஆணைக்குழு பகிரங்கப்படுத்தியது. அத்துடன் இதன்போது தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த குற்ற புலனாய்வு பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க சீயோன் தேவாலய தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை முன்வைத்து ஆணைக்குழுவில் சாட்சி வழங்கினார்.
அவரது சாட்சியத்தில்,
‘சீயோன் தேவாலயத்திற்கு அருகில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது தாக்குதலை நடத்திய பயங்கரவாதி மொஹமட் நாசர் மொஹமட் ஆசாத் என அடையாளம் காணப்பட்டான். ஆசாத் 2005, 2012ம் ஆண்டுகளில் கட்டாரில் வசித்த பின் நாடு திரும்பியவன் 2012 இல் அப்துல் ரஹீம் பெரோசாவை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அப்பெண் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தார்.
அத்துடன் சீயோன் ஆசாத்தும் அவனது மனைவியும் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் (2019 ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு) கல்முனையில் இருந்து வானில் கொழும்பை வந்தடைந்தனர். அவர்கள் கொள்ளுப்பிட்டி லகி பிளாசா தொடர் மாடி வீட்டு தொகுதியில் தங்கியிருந்த பயங்கரவாதி ஷஹ்ரான் ஹசிம், அவனது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோருடன் கடுவாபிட்டி தேவாலயத்தில் குண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மொஹமட் ஹஸ்தூன் மற்றும் அவனின் மனைவி சாரா ஜஸ்மின் அல்லது புலஸ்தினி ஆகியோரை சந்தித்தனர்.
பின்னர், ஏப்ரல் 20ம் திகதி மதியம், ஆசாத்தின் வான் ஷஹ்ரான் ஹஷசிமின் சகோதரர் ரில்வான் தங்கியிருந்த பாணந்துரையில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தது. பின்னர் இரவு 8.52 மணியளவில் மருதானை சாஹிரா கல்லூரி அருகே கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற பஸ்ஸில் ஆசாத் ஏறியிருந்தான். அவனது முதுகில் ஒரு பை மற்றும் கைகளில் மற்றொரு பை இருந்ததை சிசிடிவி காட்சிகள் தெளிவாகக் காட்டியது. அந்த பெரிய பையை அவன் பேருந்தின் அடிப்பகுதியில் வைத்ததாக பஸ் ஓட்டுனர் கூறினார். கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய அலாவூதின் மொஹமட் என்பவனே அவனுக்கு பஸ்ஸின் இருக்கையை முன்பதிவு செய்துள்ளான்.
ஏப்ரல் 21ம் திகதி அதிகாலை 2.16 அளவில் ஆசாத் பஸ்ஸிலிருந்து இறங்கி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு சென்று, அதிகாலை 4.39 மணி வரை பள்ளிவாசலுக்கு முன்னால் காத்திருந்தான். அவன் கொண்டுவந்த பொருட்கள் அனைத்தும் அவனுக்கு அருகில் தரையில் கிடந்தது. ஆனால் அந்த வழியாக சென்ற பொலிஸ் மொபையில் கண்காணிப்பு வாகனங்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.
அதிகாலை 4.39 அளவில் பள்ளிவாசல் திறக்கப்பட்ட போது பயங்கரவாதி ஆசாத் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பல மணி நேரம் அமைதியின்றி நடந்து கொண்டதுடன், காலை 8.32 அளவில் சிவப்பு நிற டி-சேட் அணிந்து ஒரு பையுடனும், கையில் ஒரு பையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். அவ்வாறு புறப்பட்டவன் காலை 9.33 அளவில் சீயோன் தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்தான். தாக்குதல் நடந்த இடத்தில் குண்டு தாரியின் கையடக்க தொலைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பயன்படுத்தப்பட்ட சிம் மற்றொரு நபரின் பெயரில் இருப்பதும் விசாரணைகளில் தெரியவந்தது.’ – என்றார்.
இதேவேளை தனது மகனின் புகைப்படங்களை எரித்ததற்காக ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டில் பயங்கரவாதி ஆசாத்தின் தாய் கைது செய்யப்பட்டு இப்போது குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் விசாரணை அதிகாரி சாட்சியமளித்தார்.