திருச்சியில், இரு சிறுமியரை திருமணம் செய்த மணமகன்கள், அவர்களின் பெற்றோர் உட்பட, ஒன்பது பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
திருச்சி, துறையூரை சேர்ந்த சதீஷு, 28, என்பவருக்கும், 17 வயதான அவரது உறவுக்கார சிறுமிக்கும், அங்குள்ள கோவிலில், நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. அதுபோல, திருச்சி கருமண்டபத்தில் வசிக்கும், லால்குடியை சேர்ந்த சுப்ரமணிக்கும், 27, வாளாடியைச் சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும், மணமகன் வீட்டில், நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
சிறுமியருக்கு நடந்த இந்த திருமணங்கள் குறித்து, சமூகநலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, ‘சைல்டுலைன்’ அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், திருமணம் முடிந்த இரு சிறுமியரையும் மீட்டு, குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்து, காப்பத்தில் தங்க வைத்து உள்ளனர்.போலீசார், இரு மணமகன்கள் உட்பட, ஒன்பது பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.