வட இந்திய கான்பூரில் இன்று அதிகாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர, 150 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
தொடரூந்து தடம் புரண்டதில் 14 பயணிகள் பெட்டிகள் பெரிதும் சேதமடைந்தன.
தொடரூந்தின் எஞ்சினை அடுத்த பெட்டிகளில் பயணித்தவர்களே அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர்.
மீட்பு பணியாளர்கள் பார இயந்திரங்களின் உதவியுடன் பாதிப்படைந்த பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல பயணிகள் இடிபாடுகளுக்கு அடியில் அகப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தொடரூந்து தரப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இடிபாடுகளுக்கு இடையே அகப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள் உட்பட சிலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காயமடைந்த பலர் தமது உறவுகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இந்த அனர்த்தத்தில் பாதிப்படைந்த மக்களின் குடும்பத்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது அனுதாபத்தினை தெரிவித்துள்ளார்.