புழல் மத்திய சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 1012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 158-ஆக உள்ளது.
புழல் மத்திய சிறையிலும் கொரோனா பரவி உள்ளது. ஏற்கனவே கைதிகள் மற்றும் ஒரு தூய்மைப் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புழல் சிறை வளாகத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவ வார்டும் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று புழல் மத்திய சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சிறைக்காவலர் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31 லிருந்து 33ஆக உயர்ந்துள்ளது.